விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்” என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மகளிர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று, தன் விண்வெளிப் பயண அனுபவங்களை பகிர்ந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” விண்வெளி பயணத் திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே ‘திரில்’ அனுபவமாக சிலிர்ப்பு தரும். அது மனித சகிப்புத்தன்மையின் ஒரு கடினமான சோதனை. நீங்கள் ஒருமுறை குறைந்த ஈர்ப்புவிசை கொண்ட விண்வெளிக்கு சென்றால் உங்கள் உடல் அந்த சூழலுடன் போராடும், எல்லாமே மாறிவிடும்.
விண்வெளியில் இருந்தபடி பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு முன்பு கடினமான சூழலில் இருந்தேன். அப்போது தலைவலி மற்றும் குமட்டலில் அவதிப்பட்டு வந்தேன். விண்வெளியில் நோய்வாய்ப்பட்டால் நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் குமட்டலுக்கான மருந்து எடுத்தால் அது உங்களை மயக்கமடையச் செய்யும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.