ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், வெனிசுலாவின் இரண்டாம் பிரிவு அணிக்காக விளையாடும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளிலிருந்து, ஆர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லூகாஸ் ட்ரெஜோவின் (Lucas Trejo) மனைவி மற்றும் இரு குழந்தைகளின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கான 74 மணி நேரத் தேடல் பணி இந்த வார இறுதியில் முடிவுக்கு வந்தது.
வெனிசுலா கழகமான ‘ஸ்போர்ட் மரிடிமோ டி லா குவைரா’ (Sport Maritimo de La Guaira) அணியின் வீரரான 38 வயதுடைய ட்ரெஜோ, அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது தனது அணியுடன் கராகஸில் இருந்தார்.
லா குவைராவின் பிளாயா கிராண்டேவில் உள்ள தனது குடும்பத்தினர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததை அறிந்ததும், தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக அவர் உடனடியாக அந்தப் பேரிடர் பகுதிக்குச் சென்றார்.
இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு உதவ, ட்ரெஜோவின் தந்தையும் சகோதரரும் அர்ஜென்டினாவிலிருந்து வந்தனர்.
ட்ரெஜோவின் மனைவி யானினா மரனெல்லா மற்றும் அவர்களது குழந்தைகளான ஆரோன், ஐன்ஹோவா ஆகியோரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணி முடிவுக்கு வந்தது.
இந்தத் துயரச் சம்பவம், தென் அமெரிக்கக் கால்பந்துச் சமூகத்தினர் மத்தியில் பரவலான ஆதரவு மற்றும் அனுதாப அலைக்கு வழிவகுத்தது.
ட்ரெஜோவின் நெருங்கிய நண்பரும் சக ஆர்ஜென்டினா கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ, அந்தக்குடும்பத்தினரின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தார்.
கிளப் ஸ்போர்ட் மரிடிமோ டி லா குய்ரா ஞாயிற்றுக்கிழமை (28) ஒரு அறிக்கையில் இறப்புகளை உறுதிப்படுத்தினார்.
வெனிசுவேலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் டிரெஜோவின் குடும்பமும் அடங்கும்.
மீட்புப் பணிகள் தொடர்வதால், அவசரகாலக் குழுவினர் அப்பகுதியில் தொடர்ந்து உள்ளனர்.
