வேலூரில் ரூ.32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா திறப்பு | Rs.32 Crore Worth Mini Tidel Park Inaugurated at Vellore

சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடியாகவும், 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து அங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “வேலூர் மாவட்ட பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா வேலூர் மாவட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நகர்ப்புற, கிராமப்புற பொருளாதார வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு இணைப்பாகவும் அமையும்” என்றார். இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக கண்காணிப்பு பொறியாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply