பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர்.
மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது.
பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது.
அண்மையில், பணயக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
