🏚️ இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவில் (Manado) உள்ள ‘வெர்தா தாமை’ (Werdha Damai) முதியோர் இல்லத்தில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை இரவு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக்கொண்டிருந்த போது இரவு சுமார் 8:30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தீ ,வேகமாகப் பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுமார் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் சமையலறையில் ஏற்பட்ட மின் கசிவு (Electrical Short Circuit) காரணமாகத் தீ பிடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், முறையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளூர் மக்களும் முதியவர்களை மீட்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tag Words: #IndonesiaFire #Manado #NursingHomeTragedy #Sulawesi #BreakingNews #FireAccident #ElderlyCare #ManadoNews #TamilNews #Indonesia2025

நன்றி

Leave a Reply