71
ரஷ்யாவின் இராணுவப் புலனாய்வு அமைப்பான GRU-வின் இரண்டாம் நிலைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev), மீது இன்று (06-02-2026) மொஸ்கோவில் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் முதுகில் சுடப்பட்டதாகவும், அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் (Critical Condition) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்கோவின் வடமேற்குப் பகுதியில் உள்ள வொலோகோலம்ஸ்க் (Volokolamsk) நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 7 மணி அளவில், ஒரு மர்ம நபர் ஜெனரல் அலெக்ஸீவை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட ‘கொலை முயற்சி’ என ரஷ்ய புலனாய்வுக் குழு (Investigative Committee) வழக்குப்பதிவு செய்துள்ளது. சமையல் விநியோகஸ்தர் (Food Delivery Courier) போல வேடமிட்டு வந்த நபர் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அலெக்ஸீவ் ரஷ்ய இராணுவத்தின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராவாா். 2011 முதல் ரஷ்ய இராணுவப் புலனாய்வு பிரிவின் முதல் துணைத் தலைவராக உள்ளார். 2023-ல் பிரிகோஜின் (Prigozhin) தலைமையிலான வேக்னர் கிளர்ச்சியின் போது, அவரோடு பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
2018-ல் பிரித்தானியாவின் சாலிஸ்பரி (Salisbury) நகரில் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதல் மற்றும் 2016 அமெரிக்கத் தேர்தல் தலையீடு புகார்கள் காரணமாக இவர் மீது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அபுதாபியில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி திட்டமிட்டு நடத்திய ‘பயங்கரவாதத் தாக்குதல்’ இது எனச் சாடியுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குத் தொடர்ந்து தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
Tag Words: #VladimirAlexeyev #GRUShooting #MoscowAttack #Russia
