அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை | ED attaches assets worth over ₹3,000 crore in money laundering case against Anil Ambani

மும்பை: பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமங்களுக்கு எதிராக பண மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மும்பையின் பாலி ஹில்லில் உள்ள அனில் அம்பானியின் வீடு, டெல்லி மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான நிலம், டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிற சொத்துக்கள், நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட்., ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். ஆகிய நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட பொது நிதி, வேறு பயன்பாடுகளுக்கு திருப்பப்பட்டதாகவும் இதன்மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017-19 ஆண்டுகளில் யெஸ் வங்கி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் முதலீடு செய்துள்ளது.

2019-க்குள் இந்த முதலீடுகள் செயல்படாத முதலீடுகளாக மாறியுள்ளன. 2019-ல் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்துக்கு ரூ.1353.50 கோடியும், ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்துக்கு ரூ.1984 கோடியும் நிலுவையில் இருந்துள்ளன.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உட்பட பல குழும நிறுவனங்களால் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஜூலை 24 அன்று மும்பையில் ரிலையன்ஸ் குழுமங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் செயல்பட்டு வரும் 50 நிறுவனங்கள் மற்றும் 25 முக்கிய நபர்களிடம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தியது.

நன்றி

Leave a Reply