இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் ரத்து:

இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சைகளுக்கும் சர்வதேச விமர்சனங்களுக்கும் உள்ளாகி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இன்னும் சில மாதங்களுக்குள், அதாவது இந்த ஆண்டுக்குள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அடக்குமுறைச் சட்டத்தை நீக்கிவிட்டு, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதேநேரம், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகவும் சர்வதேச தரத்திலான மிகவும் வலுவான புதிய சட்டமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் போது, கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு சிதையாத வகையில் மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் அவை முன்னெடுக்கப்படும் என்றார்.

உயர் நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் நிரப்பப்படும் என்று உறுதியளித்த அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தරාதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், “காலத்தின் மணல் மேடுகளால் எதையும் மூடி மறைக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்றும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஓர் பார்வை:

கடந்த 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க தற்காலிகச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசேட சட்டம், பின்னர் 1982 இல் நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது. பிணையின்றி நீண்ட காலம் சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருத்தல், சித்திரவதை மூலம் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளுதல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பிரிவுகளைக் கொண்டுள்ளதால், இச்சட்டத்தை நீக்குமாறு ஐநா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அமைப்புகள் இலங்கைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply