சூப்பர் எல் நினோ” உருவாகும் அபாயம்:

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒரு “சூப்பர் எல் நினோ” (Super El Niño) உருவாக வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கத்தை விட மிக வேகமான வெப்பமடைதல் பசிபிக் பெருங்கடலில் காணப்படுவதால், இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வானிலை நிகழ்வாக மாறக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எல் நினோவின் தீவிரம் “மிக வலுவானதாக” இருக்க 3-இல் 2 பங்கு (2 in 3 chance) வாய்ப்புள்ளதாக NOAA-வின் காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்திற்குள் (2026 இறுதிக்குள்) இது அதன் உச்சகட்ட நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் நீர்மட்டம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதையே ‘எல் நினோ’ என்கிறோம். இது உலகளாவிய காற்று மற்றும் மழைப்பொழிவு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

எல் நினோவின் தாக்கம் உலக நாடுகளிடையே வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்:

சில பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ அபாயம் ஏற்படும். இது நீர் விநியோகத்தைப் பாதிக்கும்.  இதற்கு நேர்மாறாக, சில நாடுகள் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும். ஏற்கனவே மனித நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் புவி வெப்பநிலையை, எல் நினோ மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும். இது அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும், ஆனால் பசிபிக் பகுதியில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஒரு “சூப்பர் எல் நினோ” உருவாவதானது உலகளாவிய பொருளாதாரத்திலும், குறிப்பாக விவசாயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வு என்பது வெறும் கடல் சார்ந்தது மட்டுமல்ல, அது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு சங்கிலித்தொடர் மாற்றமாகும். இலங்கையைப் பொறுத்தவரை, எல் நினோ காலங்களில் பருவமழையின் தன்மையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், இந்த “சூப்பர் எல் நினோ” உலக நாடுகளுக்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும்.

#SuperElNino  #ClimateChange  #GlobalWarming  #NOAA_Update  #ExtremeWeather

The post சூப்பர் எல் நினோ” உருவாகும் அபாயம்: appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply