48
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 11-ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) மதிய வேளையில் பெய்த திடீர் மழை காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மழைநீர் புதைகுழிக்குள் புகுந்தமையால் அகழ்வுப் பணிகள் தடைப்பட்டதுடன், இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய 11-ஆம் நாள் மதியம் பெய்த மழையினால் புதைகுழிக்குள் நீர் தேங்கியது. உடனடியாக நல்லூர் பிரதேச சபையின் “கலி பவுசர்கள்” (Gully Browsers) வரவழைக்கப்பட்டு, தேங்கியிருந்த வெள்ள நீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. மழையினால் இடையூறு ஏற்பட்ட போதிலும், இன்று புதிதாக ஒரு எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டது. மேலும், ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த 2 எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அடையாளம் காணப்பட்ட மொத்த 260 எலும்புக்கூடுகளில் ழுமையாக 256 அகழ்ந்தெடுக்கப்பட்டன.
நாளை (சனிக்கிழமை) 12-ஆம் நாள் அகழ்வுப் பணிகள் அரை நாள் மட்டும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஒருவேளை நாளை மழை குறுக்கிட்டுப் பணிகளைத் தொடர முடியாமல் போனால், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவ்வாறு இடைநிறுத்தப்பட்டால், மீண்டும் ஓரிரு வாரங்களின் பின்னர் நீதிமன்றம் குறிப்பிடும் ஒரு திகதியில் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தொிவித்தாா்
செம்மணிப் புதைகுழியில் மிக நுணுக்கமான முறையில் எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், திடீரெனப் பெய்யும் மழைப்பொழிவு தடயவியல் ஆதாரங்களைச் சிதைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. எலும்புக்கூடுகள் சிதைவடையாமல் இருப்பதற்காகவும், அகழ்வுப் பகுதியைச் சேதமடையாமல் பாதுகாக்கவும் வெள்ள நீரை வெளியேற்றுவது அவசியமானது. தற்போது யாழ்ப்பாணத்தில் மழைக்கால அறிகுறிகள் தென்படுவதால், ஆய்வாளர்கள் மற்றும் சட்டப் பிரதிநிதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர். பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது என்பது ஆய்வின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்படும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

#ChemmaniExcavation #RainInterruption #ForensicUpdate #JaffnaMassGrave #NallurPradeshiyaSabha
