ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன்பின் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் நாட்டை வழிநடத்த ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தலைவர்கள். இவர்களுடன் ஹர்ஷ டி சில்வா போன்ற பொருளாதாரத் திறமையாளர்கள் எங்களிடம் உள்ளனர்.
ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நாடு பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என நாம் டிசம்பரில் கூறியபோது மக்கள் சிரித்தார்கள். தற்போது டொலர் மதிப்பு 325 ரூபாயில் செயற்கையாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது. அரசு டொலர் விவகாரத்தில் ஒரு நெருப்பை மறைத்து வைத்துள்ளது.
எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டு அரசுக்கு ஆதரவாகப் பேசும் சிலரின் அறியாமையால்தான் நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை தவறு செய்துவிட்டோம் என்பதை மக்கள் இப்போது உணர்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் காலம் வரும்போது, இன்று அரசுக்கு ஆதரவாகப் பேசும் வீண் பேச்சுக்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.

