தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள்? எளிமையான அரசியல் கணக்கு இதுதான்! – Sri Lanka Tamil News

தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் குழப்பம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரால் ஆட்சி அமைக்க முடியும், தற்போது என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை எளிமையாக பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும், புதிய அரசு இன்னும் அமைக்கப்படாதது மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தற்போது அரசியல் கணக்குகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளே முக்கியமாக மாறியுள்ளன.

இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அந்தக் கட்சியிடம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும், மொத்த எண்ணிக்கை 112-ஐ மட்டுமே எட்டுகிறது. இதனால் இன்னும் குறைந்தபட்சம் 6 அல்லது 7 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.

இதனால்தான் விஜய் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதால், உடனடியாக ஆதரவு அளிக்கும் நிலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மறுபுறம், அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வலை ஏற்படுத்திய விஷயம் திமுக – அதிமுக இணைப்பு பற்றிய தகவல்கள்தான். திமுக வெளியில் இருந்து ஆதரவு அளித்து அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற பேச்சு வலுத்து வருகிறது. ஆனால் அந்த அணிக்கும் முழு பெரும்பான்மை கிடைப்பது சுலபமல்ல.

திமுக மற்றும் அதிமுக இணைந்தாலும், அவர்களுடன் சிறிய கட்சிகள் சேர்ந்தாலும் 118 என்ற எண்ணிக்கையை எட்டுவது கடினம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாமக இணைந்தால் விசிக வெளியேறும் சூழல் உள்ளது. அதேபோல் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு அணிகளுடனும் சேர வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது தமிழ்நாட்டில் “யாராலும் முழுமையான அரசு அமைக்க முடியாத நிலை” உருவாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதுவே ஆளுநர் உடனடியாக யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி, நிலையான அரசு உருவாகாத சூழலில் இறுதியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. தற்போது தமிழக அரசியல் அந்த விளிம்பை நோக்கி நகர்கிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த சூழலில் விஜய்க்கு முன் இருக்கும் மிகப்பெரிய அரசியல் வாய்ப்பு அதிமுகவில் பிளவு ஏற்படுவதுதான் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க, அதிமுகவின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை தனது அணிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருக்கும்.

அதாவது 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சுமார் 32 பேரை தன் பக்கம் கொண்டுவர முடிந்தால் மட்டுமே நிலையான அரசு அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால் அதிமுக போன்ற கட்டுக்கோப்பான கட்சியில் அது நடைமுறையில் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரத்தை பார்த்தால், தமிழகத்தில் அடுத்த சில நாட்களே மிகவும் முக்கியமானவை. கூட்டணி அரசா, சிறுபான்மை அரசா, அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியா என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply