பங்களாதேஷில் ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கங்களில் 10 வயது சிறுவன் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகள் தெரிவித்ததின்படி, பெரும்பாலானோர் திறந்த வெளிகளில் பணியாற்றிய விவசாயிகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் இருந்தவர்கள் ஆவார். சிலர் வீட்டருகே இருந்தபோது மின்னல் தாக்கத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் புயலுடன் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷில் காடுகள் அழிவு காரணமாக மின்னல் தாக்க மரணங்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முன்பு உயரமான மரங்கள் மின்னலை ஈர்த்ததால் மனிதர்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், அவை அழிந்ததால் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் விளக்குகின்றனர்.
பங்களாதேஷில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பதாகவும், 2016 ஆம் ஆண்டு இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
1
