78
லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் புதன்கிழமை அன்று இரு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் யூத சமூகத்தினர் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் என லண்டன் மாநகரக் காவற்துறை (Metropolitan Police) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய நேரப்படி முற்பகல் 11:16 மணியளவில் கோல்டர்ஸ் கிரீன் வீதிக்கு அருகிலுள்ள ஹைஃபீல்ட் அவென்யூவில் (Highfield Avenue) இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 76 மற்றும் 34 வயதுடைய இரு யூத ஆண்கள் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட அவர்கள், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் (Stable Condition) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய 45 வயதுடைய சந்தேக நபரை, காவற்துறையினர் மின்னதிர்ச்சி கருவி (Taser) மூலம் செயலிழக்கச் செய்து கைது செய்தனர். அவர் காவற்துறையினரையும் தாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதான நபருக்குத் தீவிர வன்முறை மற்றும் மனநல பாதிப்புகள் இருந்த வரலாறு இருப்பதாக காவற்துறை ஆணையர் சர் மார்க் ரவுலி (Sir Mark Rowley) குறிப்பிட்டுள்ளார். தற்சமயம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியப் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) இச்சம்பவத்தைக் கடும் சொற்களால் கண்டித்துள்ளார். “யூத சமூகத்தின் மீதான தாக்குதல் என்பது பிரித்தானியாவின் மீதான தாக்குதல்” என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ‘ஹரக்கத் அஷாப் அல்-யமீன் அல்-இஸ்லாமியா’ (Harakat Ashab al-Yamin al-Islamiyya) எனும் இணைய வழி இயங்கும் இஸ்லாமியக் குழு ஒன்று இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. எனினும், பிரித்தானிய அதிகாரிகள் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த சில மாதங்களாகவே யூத சமூகத்தின் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் வாழும் 300,000 யூதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு லண்டனிலேயே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
