அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்த நேரடி இராணுவ நடவடிக்கைகள் தற்போது ‘நிறுத்தப்பட்டு உள்ளதாக’ அமெரிக்க நிருவாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போர் அதிகாரத் தீர்மானத்தின் (War Powers Resolution) கீழ் விதிக்கப்பட்ட 60 நாள் காலக்கெடு இன்றுடன் (மே 1, 2026) முடிவடைவதைத் தொடர்ந்து, மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ், கடந்த ஏப்ரல் திகதி 7 ஆம் நாள் இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இது பின்னர் காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்டது.
கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்கப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையே எவ்வித துப்பாக்கிச் சூடு அல்லது நேரடி மோதல்கள் நடைபெறவில்லை என ரொய்டர்ஸ் (Reuters) மற்றும் அல் ஜசீரா (Al Jazeera) செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிருவாகம், போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதால் ‘போர் நடவடிக்கைகள்’ முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதுகிறது. இதன் மூலம், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர நாடாளுமன்றத்தின் (Congress) மேலதிக அனுமதியைப் பெற வேண்டிய அவசியத்தைத் தவிர்த்துள்ளது.
போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் பிடி மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக அப்பகுதியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவுகிறது.
பெப்ரவரி 28 இல் தொடங்கிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிருவாகம் மே 1 ஆம் திகதிக்குள் நாடாளுமன்ற அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தற்போது போர்நிறுத்தம் நீடிக்கப்படுவதால், மோதல்கள் “முடிவுற்றதாக” (Terminated) அமெரிக்கா அறிவித்துள்ளது.
