60
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் காணித் தகராறு ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டிப் பெண்களை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இளவாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகப் பிணக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை (25 ஏப்ரல் 2026) குறித்த காணியைத் துப்புரவு செய்யும் பணிகளில் அருச்சுனா இராமநாதன் ஈடுபட்டிருந்த வேளை, அங்கு வந்த மாற்றுத் தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட குழுவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, ஆவேசமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில், நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அங்கிருந்த பெண்கள் கூச்சலிடுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காப்புக்காக வழங்கப்படும் கைத்துப்பாக்கியை, பொதுமக்களை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதி ஒருவரே இவ்வாறான வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சமூக மட்டத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
