50
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வு பணிகள் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகளில் புதிய என்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் இருந்து 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழி அகழ்வின் முதல் கட்டம் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 09 நாட்கள் நடைபெற்ற நிலையில், அப்போது 19 மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழ்வு கடந்த ஆண்டு ஜூன் 26ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 3ஆம் திகதி வரை 45 நாட்கள் இடம்பெற்றது. இந்த கட்டத்தில், முதல் கட்டத்தில் மீட்கப்பட்ட 19 என்புக்கூடுகள் உட்பட மொத்தம் 240 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
மூன்றாம் கட்ட அகழ்விற்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதன் முதல் பகுதி கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தொடங்கி மே 9ஆம் திகதி வரை 12 நாட்கள் நடைபெற்றது. இதில் 21 என்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை 22 நாட்கள் தொடர்ந்துள்ளது. இதன் பின்னர் மீண்டும் தற்காலிக இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் மொத்தமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 409 என்புக்கூடுகள் வெற்றிகரமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அகழ்வுகள், இலங்கையின் போர் கால மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிக்கொணரும் முக்கியமான ஆதாரங்களாக பார்க்கப்படுகின்றன.
