2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (21) மாலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்ததை அடுத்து, ஏப்ரல் 23 ஆம் திகதி அதாவது நாளை நடைபெறவிருக்கும் வாக்களிப்புக்கு முன்னதாக, மாநிலம் அதிகாரப்பூர்வமாக 48 மணி நேர அமைதி காலத்திற்குள் நுழைந்துள்ளது.
தற்போதைய தமிழக அரசாங்கத்தின் பதவிக்காலம் மே 10 அன்று முடிவடைகிறது.
அதற்கு அமைவாக, தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்திருந்தது.
இதன்படி, ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தலும், மே 4 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகளையும் வேட்பாளர் தேர்வையும் முடித்து, மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் போட்டி பெரும்பாலும் நான்கு முனைப்பில் உள்ளது; ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது.
இந்த முன்னணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சுயேச்சையாக களத்தில் உள்ளன.
கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், கடந்த சில வாரங்களாக உயர்மட்டத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்து, பேரணிகளில் உரையாற்றியும், விரிவான மக்கள் தொடர்புத் திட்டங்களை மேற்கொண்டும் வந்தனர்.
தற்போது பிரச்சாரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதற்காகக் கடுமையான விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 126-இன் கீழ், ஏப்ரல் 21 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு முடியும் வரை அமுலில் இருக்கும் வழிகாட்டுதல்களை ஓர் அறிக்கையில் கோடிட்டுக் காட்டினார்.
அந்த விதிகளின்படி,
இந்தக் காலகட்டத்தில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது பிரச்சாரம் தொடர்பான ஒன்றுகூடல்களுக்கு அனுமதி மறுதிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகத் தளங்கள், அத்துடன் குறுஞ்செய்தி அல்லது இணைய அடிப்படையிலான தகவல்தொடர்பு ஆகியவற்றின் மூலம் தேர்தல் தொடர்பான உள்ளடக்கத்தைப் பரப்புவது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களைப் பாதிக்கும் நோக்கம் கொண்ட இசை அல்லது நாடக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்த விதிமுறைகளை மீறினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.
மேலும், ஒரு தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் அல்லாத அனைத்து அரசியல் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் அமைதிக் காலம் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பிரச்சாரகர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள் ஏப்ரல் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்குப் பின்னர் செல்லுபடியாகாது.
வாக்குப்பதிவு நாளன்று (ஏப்ரல் 23), தேர்தல் அதிகாரிகளின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வேட்பாளர்கள் வரையறுக்கப்பட்ட வாகனப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுப்பதோ அல்லது பயன்படுத்துவதோ திட்டவட்டமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளர்கள் வாக்குச் சாவடிகளிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில், இரண்டு நபர்களுடன் மட்டுமே தேர்தல் சாவடிகளை அமைக்கலாம், மேலும் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது – என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
