28
நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த “வடதாரகை” படகு, திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான முக்கிய கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் ஒரேகாலத்தில் பழுதடைந்தமையால், நெடுந்தீவு மக்களுக்கும் அத்தியாவசியப் பயணங்களுக்கும் கடும் சிரம நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் ஒரு பகுதியாக, வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அது இன்றுமுதல் மீண்டும் பயணிகள் சேவைக்காக இயக்கப்படுகின்றது.
இதனிடையே, “நெடுந்தாரகை” படகு தற்போது காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை நிறைவடைந்தவுடன் குறித்த படகும் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த “குமுதினி” படகின் இயந்திர திருத்தப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவடைந்த பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அப்படகும் விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக்கான தொடர்ச்சியான போக்குவரத்து சேவை மீளமைக்கப்படுவது, தீவுப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக தேவைகளுக்கும் முக்கிய நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
