மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (Valikamam North) உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (High Security Zone) முடக்கப்பட்டுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா (Commando Bungalow) முன்றலில் இன்றைய தினம் தங்களது பத்தாவது தொடர் வெள்ளிக்கிழமைப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துள்ளனா். இன்று (2026 ஜூன் 26, வெள்ளிக்கிழமை) காலை வலி. வடக்கு அகதிக்குடும்பங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு தங்களது நில உரிமைக்கான இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதக் காலப்பகுதியில் தங்களது சொந்த மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், முப்பத்தி ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் தங்களது நிலங்களை மீட்கத் தொடர் அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வலி. வடக்கின் J/249, J/256, J/248, J/251 மற்றும் J/255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட பூர்வீகக் கிராமங்களே இவ்வாறு கடந்த 36 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ளன.  இக்கிராமங்களுக்குரிய சுமார் 651 ஏக்கர் அளவிலான விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை விடுவிக்குமாறு கோரியே இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.கொடூரமான உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் இப்பகுதிகளிலிருந்து வெளியேற மறுத்து வருவதாக மக்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

ஒவ்வொரு வாரமும் தங்களுக்குரிய தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனப் போராட்டக்காரர்கள் உறுதியளித்துள்ளனர். காணி விடுவிப்புத் தொடர்பாகப் புதிய அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காததால், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இவ்விடத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தீர்மானித்துள்ளனர்.

 “எமது வாழ்நாளின் பெரும்பகுதி அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலுமே கழிந்துவிட்டது. எமது அடுத்த தலைமுறையினருக்காவது எமது சொந்த மண்ணை ஒப்படைக்க வேண்டும்” எனப் போராட்டக் களத்தில் இருந்த முதியவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

#ValiNorthLandProtest  #CommandoBungalowProtest  #HighSecurityZoneJaffna  #DisplacedTamilPeople2026  #651AcresLandRelease

The post மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply