42
மாலத்தீவில் கடந்த வாரம் ஸ்கூபா டைவிங்கின் (Scuba Diving) போது மாயமான நான்கு இத்தாலிய சுழியோடிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (2026 மே 18, திங்கட்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவரது சடலம் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய நால்வரது சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாலத்தீவின் வாவு அட்டோல் (Vaavu Atoll) பகுதியில், சுமார் 60 மீற்றர் (197 அடி) ஆழத்தில் உள்ள ஒரு நீருக்கடியிலான குகைக்குள் இந்தச் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பின்லாந்து மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த உயர் பயிற்சி பெற்ற சுழியோடிகள் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். பலியானவர்களில் நால்வர் இத்தாலியின் ஜெனோவா பல்கலைக்கழகக் (University of Genoa) குழுவைச் சேர்ந்தவர்கள். பேராசிரியர் மோனிகா மான்டெபால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா சோமக்கல் மற்றும் ஆராய்ச்சியாளர்களான முரியல் ஒடெனினோ, ஃபெடெரிகோ குவால்டியேரி ஆகியோரே இவர்களாவர். ஐந்தாவது நபர் ஜியான்லூகா பெனெடெட்டி எனும் டைவிங் பயிற்சியாளர் ஆவார்.
இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மாலத்தீவு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மீட்புப் பணியாளர் ஸ்டாப் சார்ஜென்ட் முகமது மஹ்தி (Staff Sergeant Mohamed Mahdhee) கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். மாயமானவர்களைத் தேடச் சென்ற எட்டு பேர் கொண்ட குழுவில் மஹ்தியும் ஒருவராக இருந்தார். ஏனைய சுழியோடிகள் நீரின் மேற்பரப்பிற்கு வந்தபோது, மஹ்தி வராததை உணர்ந்து மீண்டும் தேடியபோது அவர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாலத்தீவு வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தனிநபர் சுழியோடல் விபத்தாக இது கருதப்படுகிறது. அழகான பவளப்பாறைகளுக்காக உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாலத்தீவில், இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பது சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆழமான குகைப் பகுதியில் சடலங்கள் இருப்பதால், எதிர்வரும் நாட்களில் மேலதிக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாலத்தீவு அரசாங்கப் பேச்சாளர் முகமது ஹொசைன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
#MaldivesDivingAccident #ItalianDivers #VaavuAtoll #SearchAndRescue #MarineTragedy
