யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01, 2026) 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. 1981ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி இரவு, 97,000க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், ஏட்டுச்சுவடிகள் மற்றும் வரலாற்று ஆவணங்களுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகம் முற்றாக எரிக்கப்பட்டமை உலக வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் ஒன்றாகும்.

இந்தத் துயர நாளின் 45ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் மாரடைப்பால் உயிர்நீத்த தமிழறிஞர் அருட்கலாநிதி எச். எஸ். தாவீது (H.S. David) அடிகள் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, நூலகப் பேரழிவின் 45 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 45 நினைவுச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ் தலைமையிலான இந்நிகழ்வில், மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். அழித்தொழிக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுச் சொத்துக்களை நினைவுகூர்ந்து, வாசிப்பு மற்றும் அறிவுப் பாரம்பரியத்தைக் காப்போம் என்ற உறுதியுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.

நன்றி

Leave a Reply