FIFA மாநாட்டில் கலந்து கொள்ளாமல் ஈரான் அதிகாரிகள் வெளியேற்றம்:

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ் (Mehdi Taj) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர். எனினும், டொராண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் தங்களை நடத்திய விதம் மற்றும் அநாகரீகமான அணுகுமுறை காரணமாக, அவர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் உடனடியாக துருக்கி வழியாக ஈரான் திரும்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள கனடிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் துறை, தனிநபர் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்ட போதிலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) உறுப்பினர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு முதல் IRGC அமைப்பை கனடா ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதுடன், அதன் உறுப்பினர்கள் எவருக்கும் கனடாவிற்குள் இடமில்லை என்பதையும் கொள்கை ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ், முன்னதாக IRGC அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தச் சம்பவம் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply