தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வட மாகாணத்தில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் தனது உரையில், தெற்கில் முன்னெடுக்கப்படும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் வடக்கில் இதுவரை வேகம் பெறவில்லை என்ற மக்களின் நியாயமான கேள்வியை தாம் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். “தெற்கில் எடுக்கப்பட்ட அதே அதிரடி நடவடிக்கைகள் வடக்கிலும் நிச்சயம் பாயும். எதிர்வரும் மாதங்களில் வடக்கைச் சேர்ந்த ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பாரிய வழக்குகளையும் புலனாய்வு விசாரணைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என அவர் உறுதியளித்தார்.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தனது இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்காது எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக் கிரிக்கெட் சபையின் தூய்மைப்படுத்தல் மற்றும் சுரேஷ் சாலே போன்ற அதிகாரமிக்க நபர்களின் கைதுகளை முன்னுதாரணமாகக் காட்டினார்.
வங்குரோத்து அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்காத வகையில், நிதானமாகவும் நேர்த்தியாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசடியாளர்கள் சிறைக்குச் செல்லும் காலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஊழல்வாதிகளுக்கு எதிரான வேட்டை வடக்கிலும் தொடரும்: appeared first on Global Tamil News.
