தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சியை கைவிடு – தவிசாளரை அழைத்து மிரட்டிய பலாலி காவல்துறை

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி  காவல்துறையினா்  அழைத்து அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளனர். தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதி காணப்படுகிறது. குறித்த வீதியினை கடந்த 28ஆம் திகதி தவிசாளர் அடையாளம் காட்டி. அதனை நில அளவையாளர்கள் அளந்து வீதியினை குறித்து இருந்தனர்.

இந்நிலையில் , பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியினை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரினால் , விகாரதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் இல்லையெனில் 12ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும் எனவும் ,அவ்வாறு அகற்றப்பட்டால் , வேலி அகற்ற செலவழிக்கப்பட்ட நிதியை விகாராதிபதியே பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலாலி காவல்  நிலையத்தில் விகாராதிபதி விகாரை வேலியை பிரதேச சபை அடாத்தாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக முறைப்பாடு அளித்துள்ள நிலையில் , அது தொடர்பில் தவிசாளரை காவல்துறையினா் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.  அத்துடன் , வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனவே வேலியை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் , மீறி நடவடிக்கை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினா்  தவிசாளரை மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்

அதற்கு தவிசாளர் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்க தான் தயார் எனவும் , அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என்பதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. அதன் அடிப்படையிலையே அன்றைய தினம் வீதியை அடையாளம் காட்டி , அது அளக்கப்பட்டது. அந்த வீதியை விகாராதிபதி விடுவிக்க வேண்டும். இல்லை எனில் பிரதேச சபையால் வேலிகள் அகற்றப்பட்டு, வீதியை நாம் விடுவிப்போம். அதற்கு எதிராக காவல்துறையினா்   நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றில் வழக்கை எதிர்கொள்ள தயார் என காவல்துறையினருக்கு தவிசாளர் பதிலளித்துள்ளார்.

அதேவேளை, கடந்த 28ஆம் திகதி விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க முற்பட்ட வேளை “காணிகளை விடுவிப்பதற்காக தான் அளக்கின்றோம் ” என கடித தலைப்பில் மாவட்ட செயலரோ , பிரதேச செயலரோ உறுதி மொழி தந்தால் தான் காணிகளை அளக்க சம்மதிப்போம் என காணி உரிமையாளர்கள் கூறி , அன்றைய தினம் காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்கவில்லை.  அதன் போது மாவட்ட செயலர் “காணி உரிமையாளர்களின் நியாயமற்ற கோரிக்கை” காரணமாக காணி அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அன்றைய தினம் பிரதேச சபை தவிசாளர் வீதியை அடையாளம் காட்டி அதனை அளவீடு செய்ய சம்மதித்த நிலையில் , வீதி அளக்கப்பட்டது. இந்நிலையிலையே தற்போது விகாராதிபதி வீதியை கையளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ThaiyiddyViharaidispute #Illegaltempleconstruction #Roadownershipconflict #Localcouncilauthority #ValikamamNorthPradeshiyaSabha #PallalyPolice #Policeintimidationallegations

நன்றி

Leave a Reply