இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முன்னிலையாகுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை விமானச் சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நயோமி விஜேநாயக்க ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதிக்கும், 20 மில்லியன் ரூபா முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கும் கைமாற்றப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரையில் தமக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித அழைப்பாணையும் கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் காமகே தெரிவித்துள்ளார்.
