50
லெபனானின் தெற்குப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரபல ஊடகவியலாளர் அமல் கலீல் (Amal Khalil), இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவரது நிறுவனமான ‘அல்-அக்பர்’ (Al-Akhbar) மற்றும் லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 2026 ஏப்ரல் 22 அன்று (நேற்று), தெற்கு லெபனானின் அல்-தைரி (Al-Tayri) பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
அமல் கலீல் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜைனப் ஃபராஜ் (Zeinab Faraj) ஆகியோர் இப்பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்பாகச் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க அவர்கள் அருகில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த நிலையில், அந்த வீடும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அமல் கலீலை மீட்பதற்கான முயற்சிகளை இஸ்ரேலியப் படைகள் தடுத்ததாகவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த இடத்தை நெருங்க விடாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இச்சம்பவத்தை “போர்க்குற்றம்” என வர்ணித்துள்ள லெபனான் பிரதமர் நவாப் சலாம், சர்வதேச அமைப்புகளில் இது குறித்து முறையிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16 அன்று அறிவிக்கப்பட்ட 10 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
