45
வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் ‘வன்முறைகள் அற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நூறுகோடி மக்களின் எழுச்சியை (ழுடீசு) ஒட்டி 14.02.2026 தொடக்கம் 16.02.2026 காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை மட்டக்களப்பு புதிய வீதியில் அமைந்துள்ள கூடத்தில்; காண்பியக் கண்காட்சி நடைபெற்றது. இது வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களினால் நடத்தப்படுகின்ற 14 ஆவது கண்காட்சியாகும். இக் காண்பியக் காட்சியில் ஒவ்வொரு ஓவியர்களும் தங்களுடைய படைப்புகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருந்தனர். இக்கண்காட்சியில் நானும் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற விடயங்களை பார்வையிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஓவியம், என்பது வெறுமனே ஒரு படம் அல்ல அதனுள்ளும் பல மறைக்கப்பட்ட உண்மைகள் பொதிந்திருப்பதோடு ஏதோ ஒரு வகையில் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்த வல்லன என்பதை நான் அறிந்து கொண்டேன்.
இக்காண்பியக் கண்;காட்சியானது வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பிய கலைஞர்களான கமலா வாசுகி, சுசிமன் நிர்மலவாசன், அரியமலர் சசிரேகா, ரிசானா பாத்திமா சஹானா, க. வினோஜன், தங்கேஸ்வரன் விக்னேஸ்வரன், ஸ்ரீநாத் ஹேமமாலினி;, கோகுலமூர்த்தி கபிலஜன், வனோஜன் சிவசோதி, பிரசன்னா ஜசோதாரணி, கந்தசாமி ஆதித்தன், ரமேஷ;குமார் ஜகாங்கன், மு.தா.பா.ருக்ஷhனா ஈகியோரால் ஓழங்குபடுத்தப்பட்டிருந்தது.
இக் காண்பியக்காட்சியானது பல்வேறு வடிவங்களில் காண்சிப்படுத்தப்பட்டிருந்து. Pநசகழசஅiபெ யுசவஇ ஏனைநழ யுசவஇ Pயiவெiபெஇ ளுஉரடிவரசந போன்ற வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையினை காணக்ககூடியதாக இருந்தது. இக் காண்பியக் காட்சிக்கு இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். நூறுகோடி மக்களின் எழுச்சியினை கொண்டாடுவதற்காக வருகை தந்த பெண்கள் அமைப்புகளும் அங்கு வருகை தந்திருந்தனர். மூன்று நாட்களும் கண்காட்சிக்கூடம் நிறைந்திருந்தது என்று சொல்லலாம். எமது உள்ளூர் நிலவரங்களையும், உலகத்தில் இற்றை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்து விடயங்களையும் உள்வாங்கி ‘வன்முறையற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ என்ற தொனிப்பொருளில் அமையப்பெற்றிருந்தமை சிறப்புக்குரிய விடயமாகும்.
அந்த வகையிலிருந்து இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கலைஞர்களின் கலை படைப்புகள் பற்றிய சுருக்கப்பார்வையை நோக்குவோமானால், கமலா வாசுகி அவர்களினால் வரையப்பட்ட கார்ட்டூன் ஓவியங்களானது இன்றைய காலத்தில் வெகுசன ஊடகங்களில் பெண்கள், ஆண்கள் பற்றிய கீழ்த்தரமான சித்தரிப்புகளை எடுத்துக்காட்டியது. குறிப்பாக பெண்களை நுகர்வுப் பண்டங்களாகவும், ஆண்கள் அதற்கு ஆசைப்படுகின்றவர்களாகவும் சித்தரிப்பது சமூகப் பிறழ்வானது. அத்தகைய வாழ்தலை நாம் கொண்டாட முடியாது என்பதே அவருடைய கார்ட்டூன் அமைப்பில் அமைந்த ஓவியங்களூடாக அவர் முன்வைத்த விடயமாகும்.
‘ஆசையை காதல் என்பதும் பெண்களை வற்புறுத்துவதும் தவறு.’
அடுத்ததாக சுசிமன் நிர்மலவாசன் அவர்களின் ஓவிய ஆக்கத்தினை எடுத்துக்கொண்டால்,’ஹரினி அமரசூரிய’ எனும் ஓவியம். ஹரினி என்னும் பெண்நிலைவாதிக்கு எதிராக அண்மைக்காலங்களில் பேசப்பட்டு வருகின்ற எதிர்மறையான விடயங்களுக்கான ஓர் எதிர்வினையாக ஆக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் இரண்டாவது நிலையில் பெண் ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தருவாயில் அவரால் முன்வைக்கப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்படுகின்ற கருத்துக்கள், செயல்பாடுகள் என்பவற்றிற்கு இனம், மதம், மொழி, சாதி என்பவற்றை கடந்து ஒன்றுபட்ட சில ஆணாதிக்க சிந்தனையாளர்களின் மிகவும் மோசமான எதிர்மறைக் கருத்துக்களை அவர் எதிர்கொண்டார். இவற்றை அடிப்படையாகக் கொண்டே சுசிமன் நிர்மலாசன் அவர்களுடைய படைப்பு அமைந்திருந்தது. இவர் தனது ஓவியத்தில் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வண்ணங்களும் ஆழமான கருத்துக்களை குறித்து நிற்கின்றன என்று சொல்லலாம். ஹரினியின் படத்தினை பொன்நிறத்தினால் வரைந்திருப்பது அவர் மிளிரக் கூடிய ஒரு ஆளுமை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது. அவரைச் சுற்றி உள்ள வெள்ளை நிறமானது அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஆணாதிக்க சிந்தனையாளர்களை குறிப்பதாக இருக்கலாம். மதம், மொழி. சாதி, இனம் என்று வேறுபட்டு நிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை ஒரு முற்போக்கான பெண்ணிலைவாத ஆளுமையை, அவரது செயற்பாடுகளை ஒளிர விடாது வெள்ளை அடிக்க எத்தனிக்கின்ற ஒரு அரசியல் தன்மையை இவருடைய கலை படைப்பானது வெளிப்படுத்தி இருந்தது என்று கூறுகின்றேன்.
அடுத்ததாக அரியமலர் சசிரேகா என்பவருடைய ஓவியத்தை எடுத்துக் கொண்டால், அவரது ஓவியம் சிறுதானிய உணவு முறைகளை குறித்ததாகும். அதாவது, இன்றைய காலத்தில் எங்களது வாழ்க்கைமுறை கவர்ச்சிகரமான பெட்டிகள், நிறமூட்டிகள் என்பவற்றின்பால் அதிகளவில் ஈர்க்கப்பட்டு காணப்படுகின்றது. முன்னைய காலங்களில் எமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறு தானியங்கள் மற்றும் கீரை வகை, இலை வகை என்றவற்றினை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளத் தவறுகின்றோம். அந்தவகையில் உள்ளூர் உணவுகளின் பெறுமதியை மறக்கக்கூடாது, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் அதனை, இணைத்துக் கொள்ள வேண்டும், மருந்துக்காக செலவழிக்காது உணவினையே மருந்தாக பயன்படுத்தி நோயற்ற வாழ்வை இனிவரும் சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனை தன்னுடைய ‘கொலாஜ்’ முறையில் உருவாக்கப்பட்ட ஓவியத்தின் மூலம் ஆழமாக வெளிப்படுத்தி இருப்பதனை அறிந்துகொள்ள முடிகின்றது.
அடுத்ததாக கோகுலமூர்த்தி கபிலஜன் அவர்களுடைய ஓவியத்தினை எடுத்துக்கொண்டால், தனது ஊரான திருக்கோவில் கடற்கரை மணலில் பொதிந்துள்ள ‘இல்மனைட்’ வளத்தைப் பற்றியதாகும். இதனை யதார்த்த பாணியில் கன்வாஸ் மீது அக்ரலின் வர்ணம் தீட்டப்பட்ட ஓவியத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் ஒரு ஆழமான கருத்தினை புலப்படுத்துகின்றார். அதாவது ஓவியத்தின் ஒருபுறம் பரந்து விரிந்த கடலும், மறுபுறம் சூழ்ந்திருக்கும் பசுமையான மரங்களும் அப்பகுதியின் பாரம்பரிய அழகை பறைசாற்றுவதுடன், அழகிய மண் பரப்பில் காணப்படுகின்ற கறுப்பு வண்ணத் திட்டுக்கள் ‘இல்மனைட்’ படிமங்களின் இருப்பையும் அதன் மீது மோகம் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பேராசை வாழ்க்கையையும் குறித்து நிற்பதுடனும், நம் மண்ணின் வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை எதிர்கால சந்ததிக்கு அறியப்படுத்தும் ஒரு ஆழமான சிந்தனையை ‘கறுப்பு தடம்’ எனும் தன்னுடைய ஓவியத்தின் மூலம் வெளிக்காட்டி இருப்பதுடன் இயற்கை அன்னை வழங்கிய இந்த அரிய கறுப்பு மணலை சுரண்டத்துடிக்கும் அந்நியச்சக்திகளுக்கு எதிராகவும், அதனை காப்பாற்றுவதற்காக போராடும் எமது மக்களின் உள்ளுணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் அக்ரலிக் ஊடகத்தில் செதுக்கியிருப்பது சிந்திப்பதற்குரிய ஒரு விடயமாகும்.
க.வினோஜன் என்பவர் ‘சுரண்டல்’ எனும் கருத்து பொதிந்த ஓவியத்தினை கடதாசியில் பென்சில் மற்றும் பஸ்ரல் வர்ணம் கொண்டு வரைந்துள்ளார். இக்கலைப் படைப்பின் ஊடாக இவர் கூற வரும் விடயமாவது, ஒரு பெண் தனது வாழ்நாளில் தன் குடும்பத்திற்காக உழைக்கின்ற பொழுது அவ் உழைப்பில் ஏற்படுத்தப்படுகின்ற சுரண்டல்கள் மற்றும் அப்பெண்ணானவள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தான் கண்ணூடு கண்ட விடயத்தை சான்றாக வைத்து குறிப்பிட்டுள்ளார். இதன்மூலமாக அவருடைய கலைப் படைப்பின் ஆத்மார்த்த தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது.
அடுத்ததாக கந்தசாமி ஆதித்தன் என்பவரின் ‘பெண் தெய்வம்’ என்ற தலைப்பிலமைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டால், ‘மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த இவர், தனது ஓவியங்களை மட்டக்களப்பு வாழ்வியலை மையமாகக் கொண்டு மட்டக்களப்பு பண்பாடு மற்றும் மட்டக்களப்பின் தனித்துவ அம்சங்களை ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்த விரும்புகிற தன்மையும், அனைத்து மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும், மக்கள் கலையாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் இவ் ஓவியங்களை அலங்கார ஓவியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தவகையில் இந்த ஓவியம் மட்டக்களப்பில் பொதுவாக இடம்பெறும் இந்து சமய பெண் தெய்வ வழிபாட்டை பற்றியதாகும். மட்டக்களப்பு பிரதேச பூர்வ குடிகளான வேடுவ குடிகள் வாழ்ந்த காலம் தொட்டு இன்றுவரை மாந்திரீகத்திற்கும் கிராமிய தெய்வ வழிபாட்டிற்கும் பிரசித்தி பெற்ற ஒரு இடமாகும். தெய்வங்களுக்கான சடங்குகளில் மாந்திரீகம் கற்றோர் தெய்வங்களை மனித உடலில் உச்சாடனம் செய்து மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்தல், குறி சொல்லுதல், நோய்களை தீர்த்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். பூர்வ குடிகள் வாழ்ந்த காலங்களில் தெய்வங்களுக்கான வழிபாட்டில் பெண்களும் தம்மை பூசை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தெய்வங்களை தொட்டுத் வணங்கி, பூசைகளை தாமே மேற்கொண்டு வழிபாட்டை நிகழ்த்தியதாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலங்களில் அவை சமஸ்கிருத பூசை முறைகளின் ஊடுருவல் காரணமாக சிறிது சிறிதாக மருவி தற்பொழுது பெண்கள் ஆலய மூல தெய்வத்தை அருகில் சென்று வணங்கக் கூட முடியாத துர்பாக்கிய நிலைமையை காண முடிகிறது.
‘இன்று கருவறைக்குள் இருக்கும் பெண்ணை தெய்வமாக வணங்கும் இந்த சமூகம் ஏன் பெண்களைத் தீட்டு என்று முடக்கி வைத்திருக்கிறது? என்று தனது மனதிற்குள் எழுந்த கேள்வியையே இந்த அலங்கார ஓவியத்தினூடாக வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்பதனை அவரது ஓவியத்தின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.
வனோஜன் சிவசோதி என்பவர் பன்பாய், பலகை, கம்பி மற்றும் நூல் என்பவற்றைப் பயன்படுத்தி ‘முடக்கப்படல்’ என்ற தலைப்பில் தனது கலைப்படைப்பினை உருவாக்கியுள்ளார். அதாவது எமது சமூகத்தில் காணப்படுகின்ற பெண்களின் ‘பாய் பின்னும் வேலையை மையப்படுத்தி படைக்கப்பட்ட படைப்பாக இது அமைந்திருந்தது. ‘அப்ஸ்ரக்ட்’ என்ற உருவத்தையும், பாய் மடிப்புக்களையும் கொண்ட ஒரு சிக்கலான தன்மையை படைத்துக்காட்டியுள்ளார். இதன் உட்கருத்து, எமது ஊர்களில் உள்ள பெண்களின் பாய்பின்னல் வேலைப்பாட்டிற்கு பின்னால் ஒழிந்துபோய்க்கிடக்கின்ற வாழ்வாதாரம் மற்றும் பிரச்சனைகள் என்பவையாகும். அதாவது, அவர்களது வாழ்வு ஒரு சுயதொழிலை நோக்காகக் கொண்டு இருந்தாலும் அவர்களது வாழ்வாதாரம் வீட்டின் சமையலறைக்குள் முடங்கிக்கிடப்பதாகவே உள்ளது. இதனால் இத்தகைய பெண்களது திறமைகளையும், அவர்களது சுதந்திரமான வாழ்தலையும் அறியமுடியாததுடன் முதலாளி வர்க்கத்தினர் அதிக இலாபத்தினை பெற்றுக் கொள்கின்றனர் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாகவே இப் பாய்பின்னல் கலைவெளிப்பாட்டினை காட்சிப்படுத்தியுள்ளார் என்பதை அறியக்கூடியதாய் இருந்தது.
அடுத்ததாக பறையும் பெண்நிலைவாத சக்தியும் என்ற தலைப்பில் காரிக்கன் துணியின் மேல் மை மற்றும் காரியம் என்பவற்றை பயன்படுத்தி வரையப்பட்ட ரமேஸ்குமார் ஜகாங்கன் அவர்களது ஓவியமானது, சமூகமட்டத்தில் ஒடுக்குதல் முறைக்கு உள்ளான பறை இசைக்கருவியையும், பறையிசைக்கலைஞர்களையும் இழிவென கூறிய விடயமுமாகும். ஆரம்ப காலங்களில் பெண்கள் பறையைத் தொடக்கூடாது, பறை வாசிப்பவர்கள் சாதி குறைந்தவர் என ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் பறை என்பது ஒடுக்குமுறையை தகர்த்தெறிந்து அனைவரும் குறிப்பாக பெண்களும் இசைக்க கூடிய ஒரு இசைக்கருவியாகப் பேசப்படுகின்றது. பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற சவால்களை எடுத்துக்கூறும் ஒரு கருவியாகவும், தங்களது நீதியை நிலைநாட்டுவதற்கான இசைக்கருவியாகவும் உருவெடுத்துள்ளது என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதே அவரது படைப்பின் வாயிலாக கூறவரும் விடயமாகும். இதனையே ‘பறையின் மேல் ஒரு புறக்கவசமாக நீதிக்கான பறையை வாசிக்கும் பெண்களின் உருவங்களை வரைந்துள்ளார்.
அடுத்ததாக ‘பெண்கள் உணர்வுகளற்ற உறுப்புக்கள் கிடையாது’ என்பதை ‘கலப்பூடகம்’ எனும் தலைப்பில் அமைந்த வனிதை யசோதா என்பவரது காண்பியங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்ணானவள் பல சுமைகளைச் சுமக்கும் பெட்டகமாகக் காணப்படுகின்றாள். அதனூடாக தன்னை மற்றவரிடத்தில் வெளிப்படுத்திக்காட்டமுடியாத ஒரு நிர்க்கதியான நிலைக்கு ஆளாகின்றாள். அவளுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய பெண்களை தம் தேவைக்கான பொருளாகவும், தேவையை தீர்த்து வைக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் நேரடியான வன்முறைக்கு பெண் உள்ளாவதுடன், அவளின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் மறைமுகமான வன்முறைகளும் நடைபெறுகின்றன என்பதனை வெளிப்படுத்தும் ஓவியமாகவே இவரது படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பெண் மாதவிடாய் காலங்களில் அனுபவிக்கும் வலியும், அதன்பின்னால் அவள் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றியும், ‘சலனப்படக்கலை’ (சிவப்புநாள்) வெளிப்படுத்துகின்றது. அதாவது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் என்பது இயற்கையாக ஏற்படும் விடயமாக இருந்தாலும் அதனால் அவள் அனுபவிக்கும் வலி கொடுமையானது. வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, அலுவலக வேலை என்று பல வேலைகளை செய்கின்றாள். அவளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. இத்தகைய நேரங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகும். அவளுக்கான ஓய்வினை கொடுக்க வேண்டும் என்பதனையே ஹேமமாலினி சிறிநாத் அவர்கள் காணொலிப்பதிவின் மூலம் நிழல் குறியீடாக காட்சிப்படுத்தியுள்ளார்.
தங்கேஸ்வரன் விக்னேஸ்வரன் அவர்களது ஓவியத்தை எடுத்துக் கொண்டால் இலங்கையின் கிழக்குக் கரையில் வாழ்கின்ற எமது பழங்குடிகளிடம் புழக்கத்தில் உள்ள உணவு முறைகள், அவர்களது பண்பாட்டு முறைகள், மருத்துவ குணங்கள், வழிபாட்டு முறைகள் என்பற்றை மீளவும் நினைவு கூரவைப்பதன் மூலம் எமது வாழ்தலின் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நாம் தற்பொழுது எத்தகைய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்ததாக ரிஸ்வானா பாத்திமா சஹானா என்பவரது ‘நண்டு’எனும் தலைப்பிலமைந்த பலகை, உரிமட்டை, மரம். எண்ணெய் வர்ணம், லாபர் சீட், வலை என்பவற்றால் ஆன அளிக்கை முறையினை எடுத்துக்கொண்டால், இது பார்வைக்கு புதிதாக இருந்தாலும் ஒரு ஆழமான கருத்தைப் புலப்படுத்தும் படைப்பாக அமைந்திருந்ததை அறியக்கூடியதாய் இருந்தது. அந்தவகையில், புத்தளம் மாவட்டத்திலுள்ள கண்டல்குடா பிரதேசத்தில் வசிக்கும் பெண்களின் அபாரமான துணிச்சலும், அவர்களது வாழ்வில் எதிர்நோக்கும் போராட்டங்களுமே அவர் கூறவந்த விடயமாகும். மேலும் இப்பெண்களின் உழைப்பில் தான் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் செப்பனிடப்படுகின்றது. இப்பெண்களின் விடாமுயற்சியிலும், உழைப்பிலும் பல கசப்பான உண்மைகள் மறைந்துள்ளது என்பதை உணர்வுபூர்வமான ஒரு கலைப்படைப்பாக ஆற்றுகையாக வெளிக்காட்டியிருந்தார்.
இவ்வாறாக மேற்கூறப்பட்ட அனைத்துக் கலைஞர்களின் காண்பியக் காட்சிகளும் ‘வன்முறையற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ என்ற தொனிப்பொருளுக்கமைய அமைந்திருந்ததை இட்டு ஒரு பார்வையாளர் என்றவகையில் மகிழ்ச்சியடைகின்றேன். இக்காண்பியக் காட்சிகளுக்கு பின்னால் அக்கலைஞர்களின் உழைப்பும், விடாமுயற்சியும் காணப்படுவதுடன், தாம் ஒரு ஓவியத்தின் மூலம் பல ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பது போற்றுதற்குரிய விடயமாகும். ‘ ஒரு படம் ஆயிரம் விடயங்களைச்; சொல்லும்’ என்பார்கள்;. இக் காண்பியக் கலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களும், படைப்புக்களும் ஆயிரமாயிரம் கருத்துக்களையும், கேள்விகளையும் நம்முள்ளே விதைத்துச் சென்றுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
வன்முறையற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பிலமைந்த காண்பியக்காட்சியினை ஏற்பாடு செய்த அனைத்துக் கலைஞர்களுக்கும், அதனோடு இணைந்த செயற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
‘வன்முறையற்ற வாழ்தலுக்கான கலைப் பயணம் இன்னமும் எல்லைகள் தாண்டி தொடரட்டும்….’
