வரலாற்றுத் தருணம்: வழக்கறிஞராகப் பதிவு செய்தார் ஏ.ஜி. பேரறிவாளன்!

தனது வாழ்நாளின் 31 ஆண்டுகளைச் சிறைக்கதவுகளுக்குப் பின்னால் கழித்து, சட்டப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற ஏ.ஜி. பேரறிவாளன், இன்று ஒரு வழக்கறிஞராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். எந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கைதியாகத் தசாப்தங்களாகத் தனது நீதிக்காகக் காத்திருந்தாரோ, அதே வளாகத்தில் இன்று ஒரு வழக்கறிஞராக அவர் காலடி எடுத்து வைத்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருந்த காலத்திலேயே அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சட்டப் படிப்பை (LL.B) வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் (Bar Council) உத்தியோகபூர்வமாக வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இதே சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோது எழுந்த அதே நெகிழ்ச்சியான சூழல், இன்று அவர் வழக்கறிஞராகப் பதவிப் பிரமாணம் எடுத்தபோதும் காணப்பட்டது. பல தசாப்த காலச் சிறைவாசம் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு, சட்டத்தின் துணையோடு நீதியைப் பெற்ற அவர், இனி அதே சட்டத்தின் மூலம் பிறருக்காக வாதாடத் தயாராகியுள்ளார். அறிவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

The post வரலாற்றுத் தருணம்: வழக்கறிஞராகப் பதிவு செய்தார் ஏ.ஜி. பேரறிவாளன்! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply