வெளிநாடு செல்லும் பௌத்த தேரர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சு அதிரடி முடிவு!

வெளிநாடு செல்லும் பௌத்த தேரர்கள் இனிவரும் காலங்களில் முறையான அனுமதியைப் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சில காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, தற்போது மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய ஒரு குழுவினர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டமை போன்ற சட்டவிரோதச் செயல்கள் அண்மைக் காலமாகப் பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் பௌத்த மதத்தின் கௌரவத்திற்கும், நாட்டின் மதிப்பிற்கும் இழுக்கை ஏற்படுத்துவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இனிமேல் வெளிநாடு செல்லும் தேரர்கள் பின்வரும் தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளையும் அனுமதியையும் பெறுவது அவசியமாக்கப்படவுள்ளது:

தத்தமது விகாரையின் விகாராதிபதி.

பிரதேசத்தின் சமயத் தலைவர்கள்.

தொடர்புடைய நிக்காயக்களின் (பீடங்கள்) உயர்மட்டத் தலைவர்கள்.

இது தொடர்பாக மகாநாயக்க தேரர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, இந்த பரிந்துரை முறையை மீண்டும் வலுப்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மதத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும், தேரர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply