இளமையை தக்கவைக்க ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: 26 பில்லியன் டொலர் செலவில் அமரத்துவ ஆராய்ச்சி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) முதுமையைத் தடுத்து, மனித ஆயுளை நீட்டிப்பதற்காக 26 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 39 ட்ரில்லியன் வொன்) மதிப்பீட்டில் பிரம்மாண்டமான தேசிய அளவிலான அறிவியல் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பெய்ஜிங்கில் நடந்த இராணுவ அணிவகுப்பின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் புடின் பேசிக்கொண்டிருந்த ரகசிய உரையாடல் அங்கிருந்த ஒலிவாங்கி (Hot-Mic) மூலமாக தற்செயலாக கசிந்தது. “மனித உடலுறுப்புகளை மாற்றுவதன் மூலம் மனிதர்கள் என்றும் இளமையுடனும், அமரத்துவத்துடனும் (Immortality) வாழ முடியும்” என புடின் அப்போது குறிப்பிட்டிருந்தார். அது வெறும் மேலோட்டமான பேச்சு அல்ல, மாறாக கிரெம்ளினின் தற்போதைய அதிகாரப்பூர்வ திட்டவட்டமான செயல்திட்டம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

ரஷ்யாவின் இந்த “புதிய சுகாதார பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்” (New Health Preservation Technologies) திட்டத்தின் கீழ், மனித அணுக்களின் அடுக்குகளைக் கொண்டு முப்பரிமாண உயிர்-அச்சு (3D Bioprinting) முறையில் செயற்கை உறுப்புகளை உருவாக்குதல், மரபணு ரீதியாக மனிதனுடன் ஒத்துப்போகும் ‘மினி-பன்றிகளின்’ (Mini-Pigs) உடலுக்குள் மனித உறுப்புகளை வளர்த்தெடுத்தல், மைனஸ் 170 பாகை செல்சியஸ் குளிரூட்டப்பட்ட கிரையோதெரபி அறைகள் (Cryotherapy Chambers) மற்றும் செல்லுலார் முதுமையைத் தடுக்கும் புதிய மரபணு சிகிச்சை (Gene Therapy) உள்ளிட்ட அறிவியல் புனைகதை போன்ற ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையான மனித உறுப்பு மாற்று அமைப்பை உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும்.

அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஓபன்ஏஐ-இன் சாம் ஆல்ட்மேன் போன்ற சிலிக்கான் வேலி கோடீஸ்வரர்கள் முதுமைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் முதலீடு செய்து வரும் நிலையில், ரஷ்யாவில் இது ஒரு உத்தியோகபூர்வ அரச திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. புடினின் மூத்த மகளும், நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணருமான (Endocrinologist) மரியா வோர்ட்சோவா (Maria Vorontsova) மற்றும் இயற்பியலாளர் மிகைல் கோவல்சுக் ஆகியோர் இந்த பில்லியன் டொலர் திட்டத்தை முன்னின்று வழிநடத்துகிறார்கள். தற்போது 73 வயதாகும் ஜனாதிபதி புடின், தனது கம்பீரமான மற்றும் என்றும் இளமையான பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை இந்தத் திட்டம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

எனினும், ரஷ்யாவின் இந்த ஆய்வுகள் சர்வதேச அறிவியல் இதழ்களில் இன்னும் நிரூபிக்கப்பட்டு வெளியாகாததால், உலகளாவிய விஞ்ஞானிகள் மத்தியில் இதுகுறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன.

நன்றி

Leave a Reply