நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் அதே வடிவில் சட்டரீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “ரீபில்டிங் ஸ்ரீலங்கா நிதியம்” தொடர்பாக நிதிக்குழு தவறான புரிதலை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், “ரீபில்டிங் ஸ்ரீலங்கா என்ற பெயரில் தனியான நிதியம் உருவாக்கப்படவில்லை; அது சட்டவிரோதமானது என்று கூறி அதிகாரிகளை அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள். ஆனால் எந்த அரசாங்கத்திலும் பல விடயங்கள் நடைமுறையில் இருக்கலாம்; அவை அனைத்தும் சட்டத்தில் அப்படியே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது ‘ரீபில்டிங் ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படுவது உண்மையில் கருவூலத்தின் துணைச் செயலாளரின் கீழ் இயங்கும் ஒரு கணக்காகும். அது சட்டபூர்வமானது. ‘திட்வா’ பேரிடருக்குப் பின்னர் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அந்தக் கணக்கு திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி அதற்கு ‘திட்வா நிதியம்’ என பெயரிடப்பட்டது” என்றார்.

மேலும், “இது நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு எளிய செயல். ஆனால் அதிகாரிகளிடம் ‘அப்படியான நிதியம் இல்லை அல்லவா?’ என்று கேட்டு அழுத்தம் கொடுப்பது தவறு. நாங்கள் சுனாமி நிதியை மோசடி செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. ராஜபக்சர்களைப் போல சுனாமி நிதி கொள்ளையர்கள் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், 2005ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினருக்கு சுனாமி நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அப்போது மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய ஆதரவை வழங்கியிருந்தது.

மேலும், அந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை “புலி ஆதரவாளர்கள்” மற்றும் “தேசத்துரோகிகள்” என விமர்சித்ததும் ஜே.வி.பி.யே என்பது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

நன்றி

Leave a Reply