37
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேவை (Suresh Sallay), “புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த வீரன்” எனக் கூறித் தப்பிக்க வைப்பது மிகத் தவறான ஒரு முன்னுதாரணம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (2026 ஜூன் 20, சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டு, குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினா
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டிய பிரதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சாலே, தற்போது காவற்துறையினரின் தீவிர விசாரணைக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்க மறுத்து வருகிறார். தனது கணினி (Computer) மற்றும் கைத்தொலைபேசி (Mobile Phone) ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் (Passwords) கொடுக்க மறுப்பதுடன், தற்போது திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது சித்திரவதைகள் புரியப்படுவதாகச் சிவில் சமூகத்தின் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். “சிறைச்சாலையில் ஒரு சிறிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையே அவர்கள் சித்திரவதை என்று கூறுவார்களாயின், அதைவிடப் பல மடங்கு கொடூரமான சித்திரவதைகளை எமது தமிழ் இளைஞர்கள் கடந்த காலங்களில் இதே புலனாய்வுத் துறையினரால் அனுபவித்துள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைக்காலமாகப் பாரிய ஊழல் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சில அதிகாரிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர் “இவர்கள் தங்களது எதிர்காலத்திற்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது தங்களின் பின்னணியில் இருந்து இயக்கிய பெரிய தலைகளைக் (Masterminds) காப்பாற்றுவதற்காகத் தங்களை மாய்த்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.”
“அதேபோன்றுதான் தற்போது சுரேஷ் சாலேவின் உயிருக்கு ஆபத்து எனக் கூறுகிறார்கள். அவர் சிலரைத் தப்பிக்க வைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க நினைக்கிறாரா அல்லது தனது தனிப்பட்ட விடுதலைக்காக இதனைச் செய்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.” எனத் தொிவித்தாா்.
ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சாலேவிற்கும் இடையிலுள்ள நெருக்கமான இராஜதந்திரத் தொடர்புகள் மற்றும் அதன் அரசியல் பின்னணிகள் குறித்துப் பாரிய உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், “அவர் நாட்டைப் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய மாபெரும் வீரன்” என்ற ஒரு போலித் பிம்பத்தை உருவாக்கி, அவர் செய்த பயங்கரவாதச் சதிக்குற்றங்களைத் திசைதிருப்பச் சில தரப்பினர் முயல்வது நாட்டின் நீதித்துறைக்கே ஆபத்தானது என சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார்.
#SureshSallayArrest #SureshPremachandran #EasterAttacks2019 #JaffnaPressMeet #IntelligenceInquirySL
