34
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, களு கங்கையின் கிளை நதிகள் பெருக்கெடுத்து வருவதால் சில பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (2026 மே 15, வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது. குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டி வருவதால், நதிப் பள்ளத்தாக்குகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, புளத்சிங்கள (Bulathsinhala) , மதுராவல (Madurawala) , பாலிந்த நுவர (Palindanuwara) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என தொிவிக்கப்பட்டுள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றுப் படுக்கைகளுக்கு அருகில் உள்ளவர்கள் நதிகளின் நீர்மட்டம் குறித்து அவ்வப்போது விடுக்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளவும் என அறிவுத்தப்பட்டுள்ளனா்.
இதேவேளை இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure Area) காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (2026 மே 15, வெள்ளிக்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலையும் கனமழையும் தொடரும்.
#FloodAlertSL #KaluGanga #WeatherUpdateSL #IrrigationDepartment #DisasterManagement
