யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் மீது கிரிமினல் வழக்கு:  

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் (Yograj Singh), பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு இணையத் தொடரின் (Web Series) காட்சி தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரம் தற்போது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட மற்றும் இணையத் தொடர் காட்சிகளில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு இணையத் தொடரில் யோகராஜ் சிங் நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் பெண்களின் கௌரவத்தைக் குறைக்கும் விதமாகவும், அவதூறாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரை ஆய்வு செய்த காவற்துறையினர், அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் கிரிமினல் வழக்கைப்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ “காட்டுத்தீயாகப்” பரவியதைத் தொடர்ந்து, யோகராஜ் சிங்கிற்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

யோகராஜ் சிங் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் தலைவா்  தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்து ஊடகங்களில் பேசிப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியவர்.  கடந்த காலங்களில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர் பேசிய சில கருத்துக்களும் மத ரீதியான சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன.

இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவானாகக் கருதப்படும் யுவராஜ் சிங்கிற்கு, அவரது தந்தை யோகராஜ் சிங் மீதான இந்தப் புதிய வழக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கலை மற்றும் நடிப்பு சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது எனப் பல தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது பதியப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு, யோகராஜ் சிங்கிற்குச் சட்ட ரீதியான நெருக்கடிகளை அதிகரிக்கக்கூடும். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இணையத் தொடர் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

#YograjSingh #YuvrajSingh #LegalAction #ControversialSpeech #WebSeriesControversy

நன்றி

Leave a Reply