யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு:

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் நிலையம் புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய காவல் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காவல் துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச. பவானந்தராசா, ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் மற்றும் உயர்மட்ட காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கோப்பாய் காவல் நிலையமானது கடந்த 1995ஆம் ஆண்டு முதல் கோப்பாய் இராசபாதை வீதியில், தனியாருக்குச் சொந்தமான ஏழு காணிகள் மற்றும் வீடுகளை உள்ளடக்கிய தற்காலிக வளாகத்திலேயே இயங்கி வந்தது. இவ்வாறான சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது காணிகளையும் வீடுகளையும் விடுவித்துத் தருமாறு கோரி 07 காணி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் காவல் துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

சுமார் 06 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று யாழ். நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, தனியார் காணிகள் மற்றும் வீடுகளை உரிய உரிமையாளர்களிடம் காவல் துறையினர் மீள ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி காவல் துறையினரின் தங்குமிடம் மற்றும் மைதானமாகப் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டன.

தற்போது, பழைய காவல் நிலையம் அமைந்திருந்த பகுதியில் இருந்து இராசபாதை வீதியில் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில், புதிய அரச நிலத்தில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரைகாலமும் தனியார் வசம் இருந்த அனைத்து காணிகள் மற்றும் வீடுகளை விட்டும் கோப்பாய் காவல் துறையினர் முற்றாக வெளியேறி, அவற்றை உரிய சிவிலியன் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply