யாழ். சிறைச்சாலையில் மரண தண்டனை கைதி உயிர் துறப்பு : அரச செலவில் இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடு!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46 வயது) என்பவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றைய திகதி திங்கட்கிழமை தனது உயிரை துறந்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன், சிறைச்சாலைக்கு நேரில் சென்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இந்த விசாரணையின் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவற்துறையினர், குற்றத் தடுப்பு காவற்துறையினர் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், அவர் உயிரை துறந்த கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஜெயக்குமாரின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டிய போதிலும், தங்களது குடும்பப் பொருளாதார வறுமை நிலை காரணமாக இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாது எனத் தெரிவித்து சடலத்தைப் பொறுப்பேற்க மறுத்துள்ளார். அத்துடன், இறுதிச் சடங்குகளை அரச செலவில் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி மற்றும் தற்போதைய நிலை:

இதேவேளை, மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீளவும் உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்றைய திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், குற்றவாளிகளில் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டமையால் இன்றைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, பிறிதொரு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இக்கொலை வழக்கில் ஆரம்பத்தில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் உச்ச நீதிமன்றம் இருவரை விடுதலை செய்து, ஐந்து பேருக்கான தண்டனையை உறுதி செய்திருந்தது. இந்த ஐவரில், மேல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற காலப்பகுதியிலேயே ஒருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். தற்போது மேலும் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்களில் மூவர் மாத்திரமே தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply