நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் உதவியுடன், ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த பெங்களூரு அணிக்காக விராட் கோலி 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது அவரது ஐபிஎல் வாழ்க்கையில் 68ஆவது அரைசதமாகவும், அதிவேக அரைசதமாகவும் பதிவானது. அவர் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கோலி, வெங்கடேஷ் ஐயருடன் 62 ஓட்டங்களும், டிம் டேவிடுடன் 41 ஓட்டங்களும் இணைப்பாட்டமாகப் பெற்றதன் மூலம், பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எட்டி வெற்றியை உறுதிப்படுத்தியது.
இதற்கு முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி பெங்களூருவின் ஒழுங்கான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
பெங்களூரு அணியின் ரசிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி குஜராத் அணியை ஆரம்பம் முதலே அழுத்தத்துக்குள் வைத்தனர்.
குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் (10) மற்றும் சாய் சுதர்சன் (12) ஆகியோர் முதல் நான்கு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். மேலும் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லரும் 19 ஓட்டங்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் மட்டும் போராடி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் குஜராத் அணியை ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் பந்துவீச்சில் ரஷித் கான் ஒரே ஓவரில் ரஜத் படிதார் மற்றும் குருணால் பாண்ட்யா ஆகியோரை வெளியேற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்த முயன்றாலும், கோலியின் அமைதியான மற்றும் பொறுப்பான ஆட்டம் குஜராத் அணியின் நம்பிக்கையை முறியடித்தது.
9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, பெங்களூரு அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்த மூன்றாவது அணியாக பெங்களூரு அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன.
The post கோலியின் அதிரடி அரைசதம்; ஐபிஎல் கோப்பையை மீண்டும் தக்கவைத்தது பெங்களூரு… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.
