பிரான்சின் பாரிஸ் வடகிழக்கு புறநகர்ப் பகுதியான செயின்ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) திணைக்களத்திற்கு உட்பட்ட பொபிங்னி (Bobigny) பகுதியில், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்தியதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினரையும் இரு கைகளிலும் கத்திகளுடன் தாக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் காவற்துறை கூறுகிறது.
மே 30 சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் முற்றிலும் உண்மையானது என்பதை பிரெஞ்சு ஊடகங்களான BFMTV, Le Parisien மற்றும் பாரிஸ் காவற்துறைத் தலைமையகம் ஆகியன உறுதிப்படுத்தியுள்ளன.
பொபிங்னியின் ‘ரூ ஹெக்டர் பெர்லியோஸ்’ (Rue Hector Berlioz) வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டு வாடகை அல்லது அண்டை வீட்டாருக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக காவற்துறைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் வருவதற்கு முன்னதாகவே, குறித்த நபர் தனது அண்டை வீட்டார் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார். இதில் ஒருவருக்குத் தோள்பட்டைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்புப் பிரிவு (BAC) காவற்துறையினர், மின்தூக்கி (Elevator) மூலம் 6 வது மாடிக்குச் சென்று கதவு திறந்த கணமே, இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியிருந்த அந்த நபர் காவற்துறையினரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.
மின்தூக்கிக்குள் இருந்த காவற்துறை அதிகாரி ஒருவர், அவரை உதைத்துத் தடுத்துப் பின்னுக்குத் தள்ள முயன்றபோதும், அவர் தொடர்ந்தும் வெறித்தனமாகத் தாக்க முற்பட்டுள்ளார். இந்த விபரீத சூழலில், தங்களது உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் காவற்துறை அதிகாரி தனது துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்த அந்த நபர், அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் (SAMU) சம்பவ இடத்திற்கு விரைந்து சிகிச்சை அளித்தபோதிலும், சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
பிரான்சில் காவற்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால், சட்ட நடைமுறைகளின்படி காவற்துறையின் உள்விவகாரப் புலனாய்வுப் பிரிவான IGPN இந்தச் சம்பவம் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இச்சம்பவம் பிரான்சின் புலம்பெயர் ஈழத்தமிழர் சமூகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஆபத்தான நபராக இருந்தால் அவரை கால் பகுதியில் சுட்டு பிடித்திருக்க வேண்டிய நிலையில் எதற்காக அவர்சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என அவரது நண்பர்கள் உறவினர்கள், சமூக நலன் விரும்பிகள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
