பெரும் கோபம் (Epic Fury) – தேவ அபிரா

பரீபா சிதைக்கப்பட்ட  தன் வீட்டுக்கு முன் குந்தியிருந்தாள்.

அவள் தலையில் முக்காடு இருக்கவில்லை.

அவள் கண்களிலிருந்து *காருன் நதி பெருகிய படியிருந்தது.

அவளை அணைத்திருந்த நஸ் ரீன் முக்காடு அணிந்திருந்தாள்.

அரபு நிலமெங்கும் அவர்களது  இடிந்த வீடுகளின்  வேர்கள் பரவி இருந்தன.

அந்த வீடுகளின் முகடுகளில் கூடுகட்டியிருந்த பறவைகள் வானத்தில் அல்லோல கல்லோலப்பட்டதை சீறிச் சென்ற ஏவுகணை வெளிச்சத்தில் பார்த்தேன்.

பல்கலைக்கழகங்கள், ஆய்வுச் சாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள், பாலங்கள் எல்லாமும் தகர்ந்து கொண்டிருந்தன.

இடிந்து கற்குவியலான  மனையின் நடுவிலிருந்து ஆரஸ்

பாரசீக  வீணையை மீட்டுகிறான்

நஸ்ரினும் பரிபாவும்  ஆரஸ்சும் நான்காயிரம் ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்கள்.

அவர்களின் மீது  பண்பாட்டின்  தொன்மையான கம்பளம் விரிந்திருக்கிறது.

வரலாற்றின் ஒவ்வொரு அடியும் வண்ண மயமான இழையாக இணைந்து திரிந்து ஆன கம்பளம் அது.

அக்கம்பளத்தின் கீழ் பெண் உயிரினதும் உடலினதும் ஒளிர்வுக்கு அஞ்சிய அரசர்களின் ஆட்சியிருந்தது.

அவர்கள் அணுகளைச் செறிவூட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் நீதிக்கும்   அநீதிக்கும்  அஞ்சுதலும் அஞ்சாமையும் அக்குடிகள் தொழில்.

உனக்கென்ன வந்தது மூடா!

உனக்குக் குறி மசகு.

உன் காவலுக்கு நீ அழைத்துச் செல்லும் அவனுக்கு நர வெறி!!

பிஞ்சு முகங்களில்  மோகம் கொண்ட உன் முழுமூளையும் பிசகு.

உன்கையிற்  கழுகைத் தந்தாரே!

பெற்றோரைக் கொன்றவனை விஞ்சிய உன் வன்கடிமாவின்  கழுத்துப்பட்டிக் கயிற்றைத்  தொலைத்தாயே!

கழுகும் வன்மாவும் தொன்மையான பாரசீகக் கம்பளத்தின் நூலறுக்கத் துடிக்கின்றன.

அயலவர்க்குப் பத்துப் பேரிடர்களைக் கொடுத்த வன்மா,

பத்துக் கட்டளைகளைப் பின்பற்றாத பிறப்பு,

நுண்ணிய இழைகளால் ஆன அவ்வண்ணக் கம்பளத்தின் மீது நூற்றி அறுபத்தி எட்டு இரத்தத் துளிகள் விழுந்தபோது

இற்றுப் போனது ஈரல்

செத்துப் போனது உலகம்.

அய்யோ ! அந்தத் துளிகள் முக்காடிட்ட முகங்களாக மலர்ந்திருப்பின்  எமக்கு என்ன வெறுப்பு?

11-04-2026

தேவ அபிரா

  • ஈரானில் ஓடும்  நதி (Karun River)

  • பத்துப் பேரிடர்கள்- யூதர்களின் வரலாற்றில் அவர்கள் எதிர்கொண்ட பத்துப் பேரவலங்களைக் குறிக்கிறது அத்தகைய பத்துப் பேரிடர்களைத் தமது எதிரிகளுக்குக் கொடுத்துள்ளதாக நெதன் யாகு குறிப்பிட்டுள்ளார்

  • பத்துக்கட்டளைகள்- யூதர்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கியமான விடையங்கள்.

நன்றி

Leave a Reply