மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கானது சேனையூர் மக்களால் ஆரம்ப காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பத்ததி முறையிலான வேள்விச் சடங்காகும் . இதில் சில குடும்பங்கள் இணைந்து இந்த வேள்வியைச் செய்வார்கள்.
மாரியம்மாள் காத்தவராயனை கழுமரத்தில் ஏறும்படி கட்டளையிட காத்தவராயன் கழுவில் ஏறிய பின் மாரியம்மாளின் தங்கையாகிய பேச்சியம்மாள் அவ்விடம் வந்து காத்தவராயனை காப்பாற்றிய புராணக் கதையை மையமாகக் கொண்டே மாரியமம்மாள் வேள்வியோடு இந்த பேச்சியம்மன் வேள்வியையும் இணைத்து மாரியம்மன் கழுமர வேள்வியாக செய்யப் படுகின்றது.
இச்சடங்கு வழமையான மாரியம்மன் வேள்வியைப் போன்றே நடைபெறும். ஆனால் வீட்டின் உள்ளே வாலை, புவனை, திரிபுரை ஆகிய தேவியருக்கு கும்பம் வைத்தும், வீட்டின் வெளியே சக்தி தேவியான பேச்சி அம்மனுக்கு கூடாரம் அமைத்தும், வீட்டிற்குள் வைக்கப்பட்ட கும்பங்களுக்கும் பேச்சியம்மனின் கூடாரத்திற்கும் நேரெதிராக கழுமரம் நடப்பட்டு இருக்கும். இக்கழுமரத்தில் கோழி ஏற்றப்படும்.
மாரியம்மன் கழுமர வேள்வியின் படிமுறைகள்.
- மடிப் பிச்சை எடுத்தல்.
- பேச்சியம்மனுக்குரிய கூடாரம் கட்டுதல்
- அம்மன் முகம், இயந்திரங்களுக்கான அபிஷேகம் செய்தல்.
- முகங்களுக்கான அலங்கார ஒப்பனை செய்தல்.
- கும்பம் வைத்தல்
- மடை பரவுதல்
- பேச்சியம்மனுக்கு பலியிடுதல் (கோழி).
- அவிபாகம் செய்தல்.
- கழுமரம் நடுதல்
- கோழி கழுவேற்றல்
- கன்னிமார் பூசை
- துள்ளுமா இடித்தல்
- படையல்
- பூசை
- கன்னிமார் உபசாரம், வெளியேற்றம்
- குளிர்த்தி பாடுதல்
- பூசை நிறைவு
- கோழி கழுமரத்திலிருந்து விடுவிக்கப்படுதல்
- கரையல் கொடுத்தல் / பக்தர்களுக்கான உபசாரம்.
- கும்பம் சொரிதல்.
01.மடிப்பிச்சை எடுத்தல்.
பூசை செய்வதற்கு முதல் நாள் வீட்டில் உள்ள மூத்த பெண் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று குறிப்பாக மடிப்பிச்சை எடுக்கும் பெண்கள் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் சாறி அணிந்து காலில் பாதணிகள் இல்லாமல் நடந்து சென்று தனது முந்தானை சீலையை இரண்டு கைகளிலும் ஏந்தி கைகளை நீட்டிக்கொண்டு “நாங்கள் மாரியம்மனுக்கு கரையில் கொடுக்கப் போகின்றோம் மடிப்பிச்சை தாருங்கள்” என கேட்பார். இதுவே மடிப்பிச்சை எனப்படுகின்றது. மடிப்பிச்சையாக அரிசி சில்லறைக்காசு என்பவற்றை இடுவார்கள்.
மேலும் மடிப்பிச்சை எடுத்துவிட்டுப் போகும் போது அந்த வீட்டுக்காரர்களையும் தங்களது பூசையில் வந்து கலந்து கொள்ளுமாறு கூறிச் செல்வார்கள். அத்துடன் கன்னி பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் கன்னிமாருக்கு அனுப்புமாறு வேண்டிக் கொள்வார் அந்தப் பெண்மணி.
02.பேச்சியம்மனுக்குரிய கூடாரம் கட்டுதல்
வேள்வி செய்யப்படும் வீட்டுக்காரர்களால் தமது வீட்டு முற்றத்தில் வடக்கு பார்த்த திசையில் கூடாரம் அமைக்கப்படும். இக்கூடாரமானது கம்பு தடிகளைக் கொண்டும், கட்டாடியால் கொடுக்கப்படும் துணி அல்லது சாரியைக் கொண்டும் கட்டப்படும்.
03.அம்மன்முகம், இயந்திரங்களுக்கான அபிஷேகம் செய்தல்.
பூசகர்கள் வீட்டிற்கு வந்ததும் முதலில் அபிஷேகம் செய்வார்கள். வாலை, புவனை, திரிபுரை, பேச்சியம்மன் முகங்களுக்கான மற்றும் அந்த தேவியரின் இயந்திரங்களுக்கான அபிஷேகம் நடைபெறும். இங்கு அபிஷேகமானது குறித்த ஒரு ஒழுங்கு முறையில் நடைபெறும்.
- நீர்
- அபிஷேகத்தூள்
- பால்
- தயிர்
- பஞ்சாமிர்தம்
- கரும்பு
- இளநீர்
- திருநீறு, சந்தனம், குங்குமம்
- பன்னீர்
ஒவ்வொரு பொருளாலும் அபிஷேகம் முடிந்ததும் தூப தீபம் காட்டப்பட்டு நீரால் மீண்டும் கழுவப்படும். இறுதி அபிஷேகமான பன்னீரால் அபிஷேகம் செய்த பின் நீரால் கழுவப்பட மாட்டாது.
04.முகங்களுக்கான அலங்கார ஒப்பனை செய்தல்.
அபிஷேகம் முடிந்தவுடன் அம்மன் முகங்கள் சுத்தமான துணியால் துடைக்கப்பட்டு கும்பம் வைப்பதற்கு உரிய தேங்காயின் முடியில் சொருகி நூலால் கட்டப்படும். பின்னர் அம்மன் முகத்தில் காணப்படும் மகுடம், தோடு, மூக்குத்தி, ஆபரணங்களுக்கும், கண், புருவம், உதடு, முடி போன்றவற்றிற்கும் வர்ணம் தீட்டப்படும். பின் திருநீறு, சந்தனம், குங்குமம் சூட்டப்படும்.
ஒவ்வொரு அம்மன் முகமும் ஒவ்வொரு ரூபத்தில் காணப்படும். உதாரணமாக:-
- பேச்சியம்மனின் முகம் சுருட்டை முடி, அழகிய முகம், மூக்குத்தி, தோடு என்பன காணப்படும். மகுடம் காணப்படாது. கோரைப்பற்கள், நீண்ட நாக்கு காணப்படும்.
- வாலை முகத்தின் ரூபம் முகத்தின் பிந்தலைப் பகுதியில் நெருப்பு எரிவது போன்று காணப்படும். சாந்தமும் ஆவேசமும் நிறைந்த ரூபமாகக் காணப்படும்.
- புவனை முகத்தின் ரூபம் முழுவதும் சார்ந்த ரூபமாகக் காணப்படும். முடியில் இளம்பிறை காணப்படும்.
- திரிபுரை முகத்தின் ரூபம் ஆவேசம் நிறைந்த ரூபமாகக் காணப்படும். கோரைப் பற்களும், வெளியே நீட்டிய நாக்கும் காணப்படும்.
05.கும்பம் வைத்தல்
அபிஷேகம் முடிந்த பின்னர் பூசாரி தீர்த்தச் சட்டி எடுப்பார். அதாவது நீரை சுத்தம் செய்தல் ஆகும். தீர்த்த சட்டியில் நீருக்கு உருவேற்றி வீட்டிற்கும் பூசைக்கு வாங்கிய பொருட்களுக்கும் தெளிக்கப்படும். பின்னர் விநாயகர், குரு மடை என்பன வைக்கப்படும். இதன் பின்னரே கும்பம் வைக்கப்படும்.
முதலில் கும்பம் வைக்கும் இடத்தில் கும்பம் வைப்பதற்கு பச்சரிசி குவியலாக இட்டு பீடம் அமைக்கப்படும். பின் அரிசியின் மேல் வெற்றிலை அடுக்கப்படும். பின் பீடத்தில் இயந்திரத்தகடு பிரணவ மந்திரம் மற்றும் அந்த தெய்வத்திற்குரிய உச்சாடன மந்திரங்கள் மூலம் உருவேற்றி வைக்கப்படும். பின் நூல் சுற்றிய குடத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த நீர் விட்டு அதற்குள் வெற்றிலை, பாக்கு, பழம், சில்லறைக்காசு என்பன போடப்பட்டு வாய்ப்பகுதியில் வேப்பிலை சொருகி அதன் மேல் அம்மன் முகம் கட்டப்பட்ட தேங்காய் வைக்கப்படும்.
பின்னர் அக்கும்பத்திற்கு பட்டு, பூமாலை என்பன சாத்தி, பிரணவ மந்திரம், உச்சாடன மந்திரங்கள் மூலம் உருவேற்றி தயார் செய்யப்பட்ட பீடத்தில் கும்பமானது பூசகரால் தூக்கி வைக்கப்படும். கும்பம் வைத்தலில் முதலாவதாக வாலை, புவனை, திரிபுரை போன்றவற்றின் கும்பக்கங்களும் பின்னர் கூடாரத்தில் பேச்சியம்மனுக்கான கும்பமும் வைக்கப்படும்.
06.மடை பரவுதல்
கும்பம் வைக்கப்பட்ட பின்னர் கும்பத்தின் முன்னால் குத்துமடை என்று கூறப்படும் சிறிய மடை வைக்கப்படும். பின் குத்துமடைக்கு மேலாக வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றைப் பரவி மடை வைக்கப்படும்.
முக்கியமாக அம்மனுக்கு உரித்தான காப்பு, சீப்பு, கண்ணாடி, காதோலை, கரிசமணி, மை, மணம் என்பனவும் மடையில் வைக்கப்படும்.
கும்பத்திற்கான மடை வைத்த பின்னர் ஏனைய பரிவாரத் தெய்வங்களுக்கான மடை வைக்கப்படும். இதில் வீரபத்திரன், நாராயணர், காளி, ஆஞ்சநேயர் போன்ற தேவாதிகள் ஏனைய பரிவாரத் தெய்வங்களுக்குள் அடங்கும்.
வீட்டிற்குள் மடை வைத்த பின்னர் வீட்டிற்கு வெளியே உள்ள பேச்சியம்மன் கூடாரத்திற்குள் மடை வைக்கப்படும். கும்பத்தின் முன்னால் குத்துமடை என்று கூறப்படும் சிறிய மடை வைக்கப்படும். பின் குத்துமடைக்கு மேலாக வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றைப் பரவி மடை வைக்கப்படும். மேலும் காப்பு, சீப்பு, கண்ணாடி, காதோலை, கரிசமணி, மை, மணம் என்பனவும் மடையில் வைக்கப்படும்.
07.பேச்சியம்மனுக்கு கோழி பலியிடுதல்
இவ்வேள்வியில் முக்கியமான ஒரு பகுதியாக இது காணப்படுகின்றது. பேச்சியம்மனுக்கு கோழி பலியிடப்படும் ஒழுங்கானது
- கோழியை சுத்தம் செய்தல்
- கோழிக்கு உபதேசம் கொடுத்தல்
- உருவேற்றல்
- வீட்டுக்காரிகளின் தலையைச் சுற்றி நேருதல்
- பலியிடுதல்
- பலிக்காவல் செய்தல்
- மறிப்பிடுதல்
இப்பலியிடல் சடங்கானது வீட்டுக்காரரின் பேச்சியம்மன் சாமிப்படியில் நடைபெறும். முதலில் பலியிடுதலுக்கு தீர்த்தச்சட்டி பூசகரால் எடுக்கப்படும். பின்னர் வெள்ளை விரித்து அதன் மேல் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து மடை வைக்கப்படும். மடையின் முன்னால் வாழை இலையால் செய்யப்பட்ட கொட்டுவம் வைக்கப்படும். கொட்டுவம் என்பது வாழை இலையால் செய்யப்பட்ட பெட்டி போன்ற ஒரு அமைப்பாகும். மேலும் மடையின் முன்னால் சாராயம் வைக்கப்படும். பின் நேர்ந்து விடப்பட்ட கறுப்பு நிற பேட்டுக் கோழி கொண்டுவரப்பட்டு மஞ்சள் கலந்த நீரால் நீராட்டிய பின்னர் மேற்கூறிய படிமுறை ஒழுங்கில் பலியிடுதல் சடங்கு இடம்பெறும்.
08.ஆவிபாக வேலை செய்தல்.
கும்பம் வைத்த பின்னர் அவிப்பாக வேலை தொடங்கப்படும். வீட்டுக்குள் வைத்த கும்பக்கங்களுக்கான அவிபாகங்கள் வேறு இடத்திலும், பேச்சியம்மனுக்கான அவிபாகங்கள் வேறு இடத்திலும் இடம்பெறும்.
வீட்டின் உள்ளே உள்ள வாலை, திரிபுரை, புவனை ஆகிய மூன்று கும்பங்களுக்குமான அவிபாகங்களாக மோதகம், அரியதரம், முறுக்கு, சிலுகு, அவல், கடலை என்பன காணப்படும்.
பேச்சியம்மனுக்குரிய அபிபாகங்களாக மோதகம், அரியதரம், முறுக்கு, சிலுகு, அவல், கடலை, கஞ்சாசிலுகு என்பவற்றுடன் மச்சப்படையல் இடம் பெறும். பெலி கொடுக்கப்பட்ட கோழியை சமைத்து வைப்பதுடன், மீன், நண்டு, இறால் என்பனவும் கறியாக சமைத்து வைக்கப்படும். பேச்சியம்மனுக்கு அவிபாகம் செய்பவர்கள் மாத்துடுத்து (மாத்துடுத்தல் என்பது கட்டாடியிடம் பெறும் உடையை தரித்தல் ஆகும்) வாய்கட்டி செய்வார்கள். மேலும் பேச்சியம்மனுக்கு பால் விட்டு அமுது மூடி திறக்காமல் சமைக்கப்படும்.
09.கழுமரம் நடுதல்
பெலியிட்டு முடிந்ததும் உள்ளே உள்ள வாலை, புவனை, திரிபுரை ஆகிய மூன்று கும்பங்களினதும் வெளியே உள்ள பேச்சியம்மன் கும்பத்தினதும் பார்வைகள் சந்திக்கும் மையத்தில் கழுமரம் நடப்படும். குழி தோண்டி வெள்ளை விரித்து அதன் மேல் கழுமரத்தை வைத்து குழிக்குள் நட வேண்டும். பின் கழுமரத்தைச் சுற்றி வெள்ளை விரித்து கழுமரத்தின் எட்டுத்திசைகளிலும் மடை வைக்கப்படும். பின் கழுமரத்திற்கு பட்டு, பூமாலைகள் சாத்தி அலங்கரிக்கப்படும்.
10.கோழி கழுவேற்றல்
படைப்பதற்கு முன்னர் அழகான, ஊனமற்ற ஒரு பாணிச்சேவலானது பூசை செய்யும் வீட்டுக்காரரால் கொண்டுவரப்பட்டு நீரினால் கழுவி சுத்தம் செய்து எடுத்து வரப்படும். பின் அந்தப் பாணிசேவலை பூசகர் தனது கைகளில் எடுத்து அதற்குரிய உச்சாடன மந்திரங்களைக் கூறி சேவலின் உடலின் நடுப்பகுதியால் அதாவது இரண்டு கால்களுக்கும் இடையால் கழுமரத்தில் காணப்படும் கூரிய கம்பியில் ஏற்றப்படும் . கீழ்ப்புறத்தால் ஏற்றப்பட்ட கம்பியானது சேவலின் மேற்ப்புற உடம்பால் வெளியே வந்து காணப்படும். அப்படியே அந்த சேவலுக்கு மலர் மாலைகள் சாத்தப்பட்டு கழுமரத்தின் சேவல் ஏற்றப்பட்ட கம்பியின் மேல் எழுமிச்சைப் பழம் குத்தப்படும்.
அந்த சேவலானது காத்தவராயனாக உருவகப்படுத்தி கழுமரத்தில் ஏற்றப்படும்.
11.கன்னிமார் பூசை
மாரியம்மன் வேள்வி சடங்கின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட மாலை வேளை தொடக்கம் கும்பம் வைத்த பின்னர் செய்யப்படும் அவிபாக வேலைகள் அனைத்தும் முடிவடைய விடியற்காலை ஆகிவிடும். இதன் பின்னர் கன்னிமாருக்கு அழைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை அழைத்து வெள்ளை விரித்து அவர்களை இருப்பாட்டி அவர்களுக்கான உபசாரங்கள் தொடங்கும்.
அவர்கள் ஒவ்வொருத்தருக்கும் குளிர்த்திச் சடங்கினை செய்யும் வீட்டுக்காரர்களால் பாத பூசை செய்யப்படும். பின்னர் அவர்களுக்கு பட்டு, வேப்பம் பத்திரம் சாத்தி அவர்களை வெள்ளையில் இருப்பாட்டுவர். இவர்களைத் தொடர்ந்து காத்தானுக்கு அழைக்கப்பட்ட சிறுவனும் இதே போன்று உபசாரங்களுடன் அமர்த்தப்படுவார்.
12.துள்ளுமா இடித்தல்
கன்னிமார் இருப்பாட்டப்பட்டதன் பின்னர் துள்ளுமா இடிக்கும் நிகழ்வு இடம் பெறும். இதற்கு துள்ளுமா இடிக்கும் உரல் உலக்கை தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதாவது வெள்ளை விரித்து அதன் மேல் மஞ்சள் கலந்த நீரால் கழுவப்பட்ட உரல் உலக்கை வைக்கப்படும். உரலைச் சுற்றி வேப்பங்குலை கட்டப்பட்டிருக்கும் அந்த உரலின் நான்கு திசையிலும் சிறுமடை வைக்கப்படும். அதேபோன்று துள்ளுமா இடிக்கும் உலக்கைகளின் நடுவில் வேப்பங்குலை கட்டப்பட்டு இருக்கும். இதற்கு இரண்டு உலக்கைகள் பயன்படுத்தப்படும்.
உரல், உலக்கை தயார் செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு, இரண்டு கன்னி மாறாக துள்ளுமா இடிப்பதற்காக விடப்படுவர். இதற்கு ஊறவைத்த பச்சை அரிசி வைக்கப்பட்டு இருக்கும். அதனோடு சக்கரையும் போடப்படும். அரிசியும் சக்கரையும் இடிபடும் போது உலக்கையில் கட்டப்பட்டிருக்கும் வேப்பங்குலை உருவி உரலுக்குள் இடப்படும். இது மூன்றும் நன்றாக இடிபட்ட கலவையே துள்ளுமா என அழைக்கப்படுகின்றது. இது மாரியம்மன் குளிர்த்திச் சடங்கின் முக்கியமான ஒரு பாகமாகக் கருதப்படுகின்றது.
13.படையல்
ஆவிபாக வேலைகள் முடிந்தவுடன் படையல் இடம் பெறும். வீட்டின் உள்ளே காணப்படும் வாலை, திரிபுரை, புவனை ஆகிய மூன்று கும்பங்களுக்கும் நீரில் இட்ட அமுது, தயிர் என்பவற்றுடன் மேற்கூறப்பட்ட அவிபாகங்களான மோதகம், வடை, சிலுகு, அரியதரம், முறுக்கு, அவல், கடலை என்பனவும் அவற்றுடன் பானக்கம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவையும் வைக்கப்படும்.
பேச்சியம்மனுக்கான படையலாக ஓலைப்பாய் விரித்து அதன் மேல் சுளகு வைத்து சுளகின் மேல் வாழையிலை இட்டு, அதன் மேல் குவியலாக அமுது இட்டு , அமுதின் மேல் சமைத்த கோழிக்கறி, மீன்கறி, நண்டுக்கறி, இறால்கறி, அவித்த முட்டை, சுட்ட கோழி, சுட்ட மீன், சுட்ட நண்டு என்பனவும் வைத்து அவற்றுடன் சாராயம், கல்லு, கஞ்சாசிலுகு என்பனவும் வைக்கப்படும்.
14.பூசை
படையல் படைத்து முடிந்ததும் பூசைகள் ஆரம்பமாகும்.
பூசையானது வீட்டிற்குள் இருக்கும் வாலை, புவனை, திரிபுரை ஆகிய கும்பங்களுக்குமான பூசையே முதலில் செய்யப்படும். வீட்டிற்குள் பூசைகள் முடிந்ததும் வீட்டிற்கு வெளியே உள்ள பேச்சியம்மன் கூடாரத்திற்குள் பூசைகள் நடை பெறும்.
வீட்டிற்குள் பூசையின் தொடக்கமாக விநாயகருக்கு தேங்காய் உடைப்பதுடன் பூசைகள் தொடங்கும். தேங்காய் உடைத்ததன் பின் விநாயகருக்கான தோத்திரங்கள் பாடி அம்மனுக்கான அகவல், காவியம், தாலாட்டு, காவடிச்சிந்து என்பன பாடப்படும். இவ்வாறு பாடப்படும் வேளையில் பூசகர்கள் மந்திர உச்சாடனங்கள் மூலம் சாமியாடிகளை அழைத்து சாமியாட்டுவர். இவ்வாறு தெய்வங்கள் ஆடத் தொடங்கியதன் பின்னர் ஒவ்வொரு தேவாதியாக வந்து பூசைகளை எடுத்துச் செல்வர். எமது பகுதியில் தெய்வம் ஆடுபவர்களை பூமரம் என்று அழைக்கும் மரபு காணப்படுகின்றது.
இவ்வாறு ஆடிவரும் தேவாதி வந்து தனக்கான ஆசனம் அமைத்துத் தர ஆணையிடும். அதற்கு பூசகர் வெள்ளை விரித்து ஆடிவரும் தேவாதிக்குரிய ஜந்திரம் கீறி அதற்குரிய ஆசன மந்திரம் கூறும்போது அந்த தேவாதி அந்த ஆசனத்தின் மேல் அமரும். தேவாதி ஆசனத்தில் அமர்ந்த பின் பூசகர் அந்த தேவாதிக்குரிய பூசை கொடுப்பார். ஆடும் தெய்வம் ஆண் தெய்வம் எனில் மஞ்சள் பூச மாட்டார்கள். பெண் தெய்வங்களுக்கு கையில் மஞ்சள் கொடுத்து பன்னீரும் விட்டுவிடுவர் அதை அந்த தேவாதி உடல் முழுவதும் பூசிக்கொள்ளும். பின்னர் பூசகர் நீரால் கழுவி விட திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு பெண் தெய்வம் எனில் கைகளில் வேப்பங்குளை கொடுப்பர். மேலும் தேவாதிகளின் கைகளில் சிலம்பு போட்டு விடப்படும்.
பின்னர் ஒவ்வொரு தேவாதிகளிலும் உருவேறிய தெய்வங்களுக்கு உரிய ஆயுதங்களும் தேவாதிகளின் கைகளில் கொடுக்கப்படும். பின்னர் பூசை பெற்றுக் கொண்ட தேவாதி பக்தர்களுக்கு கட்டுச் சொல்லுவர். பக்தர்களை அழைத்து. அவர்களின் கஷ்டங்களையும், கஷ்டங்களுக்கான காரணங்களையும், அவற்றுக்கான தீர்வையும் கூறுவர். இடையிடையே பூசகர்களாலும் பக்தர்களாலும் பாடப்படும் உருவேறி ஆடும் தெய்வத்திற்கு உரித்தான பாடல்கள் (அகவல், காவியம், தாலாட்டு, காவடிச்சிந்து) பறை, உடுக்கு, சல்லரி, தாளம் போன்ற இசைகளுடன் பாடப் பட தேவாதிகள் தமது உடலை பலவாறு அசைத்து ஆடுவர்.
வீட்டிற்குள் பூசை முடிந்ததும் வெளியே உள்ள பேச்சியம்மன் கூடாரத்திற்குள் பூசைகள் ஆரம்பமாகும்.
முதலில் தூப தீபம் காட்டி தேங்காய் உடைக்கப்படும். உடைக்கப்பட்ட தேங்காய் பாதி இரண்டிலும் சாராயம், கள்ளு என்பன ஊற்றி படையலில் வைக்கப்படும். மீண்டும் பூசகரால் தூப தீபம் காட்டிய பின் பேச்சியம்மாளுக்குரிய துதி, அகவல், காவியம் என்பன படிக்கப்படும்.
இவ்வாறு பூசையின் போது பாடல்கள் படிக்கப்படும் வேளை தெய்வமாடுபவரின் உடலில் தெய்வம் உருவேறி தெய்வமாடுதல் நடைபெறும். பேச்சியம்மாள் உருவேறி வந்தவுடன் கூடாரத்திற்குள் பேச்சியம்மாளுக்குறிய மஞ்சள் கையில் கொடுத்து பன்னீரும் விட்டுவிடுவர் அதை அந்த தேவாதி உடல் முழுவதும் பூசிக்கொள்ளும். பின்னர் பூசகர் நீரால் கழுவி விட திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு கைகளில் வேப்பங்குளை கொடுப்பர். மேலும் தேவாதிகளின் கைகளில் சிலம்பு போட்டு விடப்படும். பூமாலைகளும் போட்டு விடுவர். மேலும் மை, மணம் என்பன பூசகரால் பூசி விடப்படும். கண்ணாடி பார்த்த படி சீப்பால் தலை வாரப்படும். பின் காதோலை, கரிசமணி என்பன அணிவிக்கப்பட்டு இறுதியாக தேவாதிக்கு கண்ணாடி காட்டப்படும்.
பின் வேள்வி செய்யும் வீட்டுக்காரர்களை அழைத்து முகம் கழுவி திருநீறு, சந்தனம், குங்குமம் என்பன அவர்களுக்கு இட்டு பின் அவர்களின் பிரச்சனை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்பவற்றை ஆடும் சாமி கட்டுக்கூறும். இவ்வாறாக வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் கட்டுக்கூறி முடிந்ததும் சாமியாடுபவரின் உடலில் இருந்து சாமி நின்ற பின் பூசையானது நிறைவடையும்.
15.கன்னிமார் உபசாரமும் வெளியேற்றமும்
கன்னிமாரை வெள்ளை விரித்து அதில் அமரச் செய்து அதில் ஒவ்வொருவருக்கும் தாமரை இலை போடப்பட்டு அதில் அமுது, தயிர், பலகாரம், மோதகம், பழங்கள் என்பன வைக்கப்படும். இதனோடு துள்ளுமாவும் வைக்கப்படும் பின்னர் அவர்கள் உணவருந்த விடப்படுவர். அவர்கள் உணவருந்திய பின்னர் அவர்களிடம் திருப்தியாக உண்டீர்களா என பூசகர் கேட்பார் ஆம் என அனைவரும் கூறியவுடன் அவர்களிடம் நீங்கள் இனிமேல் இங்கு வரக்கூடாது எனக் கூறி பூசகர் தீர்த்த சட்டி நீர் எறிந்து அவர்களை விரட்டி விடுவார்.
16.குளிர்த்தி பாடுதல்
குளிர்த்தி பாடும் இடம் தயார் செய்யப்பட்ட பின்னர் அதாவது மண்பானை ஒன்றிற்கு கும்ப நூல் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அதற்குள் நீரூற்றி வைக்கப்படும். இதன் போது குளிர்த்தி பாடும் பூசகரை சுற்றி உடுக்கு அடிப்பவர், சல்லரி அடிப்பவர், பிற்பாட்டு பாடுபவர்கள் என பலர் குளிர்த்திப் பானையை சூழ நிற்பர்.
குளிர்த்தி பாட ஆரம்பித்ததும் பக்தர்கள் ஒவ்வொருத்தராக குளிர்த்தி பாடும் இடத்திற்கு வருகை தந்து சில்லறைக் காசுகளை பானைக்குள் காணிக்கையாக இடுவர். பூசகர் பானைக்குள் இருக்கும் நீரை வேப்பங் குளையால் எடுத்து பக்தர்களுக்கு தெளிப்பார்.
17.பூசை நிறைவு
குளிர்த்தி பாடி முடிந்ததும் கடவுள் வாழ்த்து, பெரியபுராணம் பாடி பூசை நிறைவு பெறும். இதன் பின்னர் குத்துமடை மட்டும் வைக்கப்பட்டு இருக்கும் மீதமான மடைகள் பிரிக்கப்படும்.
18.கோழி கழுமரத்திலிருந்து விடுவிக்கப்படுதல்
கழுவில் ஏற்றப்பட்ட சேவலுக்கு பூசகர் தீர்த்தம் தெளித்து அதற்குரிய மந்திர உச்சாடணங்களைக் கூறி கழுவில் இருந்து தூக்கி பேச்சியம்மன் கூடாரத்திற்கு முன்னாள் விடுவார்.
மாரியம்மாள் காத்தவராயனை கழுமரத்தில் ஏறும்படி கட்டளையிட காத்தவராயன் கழுவில் ஏறிய பின் மாரியம்மாளின் தங்கையாகிய பேச்சியம்மாள் அவ்விடம் வந்து காத்தவராயனை காப்பாற்றிய காரணத்தினால் சேவலாக காத்தவராயனை ஒப்பீடு செய்து இச்சடங்கு செய்யப் படுகின்றது.
19.பக்தர்களுக்கான உபசாரம்
சீலை விரித்து அதில் பூசைக்காக வருகை தந்த பக்தர்களை அமர வைத்து தாமரை இலை கொடுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட அமுதினை கைகளால் பிழிந்து தாமரை இலையில் வைப்பர். அதன் மேல் தயிர், வாழைப்பழம், சிலுகு, மோதகம், அரியதரம் துள்ளுமா என்பன வைக்கப்பட்டு உபசரிக்கப்படும்.
20.கும்பம் சொரிதல்.
பூசை நிறைவடைந்த அன்று மாலை கும்பங்கள் பூசகரால் வீட்டின் கிணறு அல்லது கால் படாத இடங்களில் சொரியப்படும்.
எழுத்தாளர்
நாகராசா லக்சிகா
கிழக்குப் பல்கலைக் கழகம்
The post மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா. appeared first on Global Tamil News.
