44
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் காணி விடுவிப்புக்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் வகையில் அப்பட்டமான பொய்களைக் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், காணி விடுவிப்பு தொடர்பாக இராணுவத் தரப்பிலிருந்து எந்தவொரு சாதகமான முடிவும் எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை இராணுவத்தினர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், சில விடயங்களை ‘பரிசீலிப்போம்’ எனக் கூறி தட்டிக்கழித்துள்ளனர்.
இருப்பினும், மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் குறித்து, கடற்தொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு மத்தியில் ‘விரைவில் தீர்வுகள் எட்டப்படும்’ என அப்பட்டமான பொய்யைக் கூறி மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.
இத்தகைய பொய்களை மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வலி. வடக்கு பிரதேச சபையினருக்கோ இக்கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு, மக்களின் உண்மையான நிலையை உணராமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
