பாணந்துறை மற்றும் சூரியவெவ இடையே கடந்த 35 ஆண்டுகளாகப் பேருந்து சாரதியாக சேவையாற்றி, மக்களின் இதயங்களில் இடம்பிடித்த லலித் என்ற பேருந்து ஓட்டுநர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவருடைய நீண்டகாலச் சேவையைப் பாராட்டும் வகையில், சூரியவெவ பகுதி மக்கள் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் நெகிழ்ச்சியான பிரிவுபசார விழாவை நடத்தினர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியான லலித், தனது உணர்ச்சிகரமான அனுபவங்களை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்.
“நான் பணத்தைச் சம்பாதிக்கவில்லை, இந்த மக்களையும் அவர்களின் அன்பையுமே எனது பெரும் சொத்தாகச் சம்பாதித்துள்ளேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்
1991-ஆம் ஆண்டு முதல் இந்தப் பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் சாரதியாக பணியாற்றிவந்த அவர், தனது 35 ஆண்டுகால மொத்தப் பணிக்காலத்தில் 26 ஆண்டுகளை இந்தப் பாதையிலேயே கழித்துள்ளார்.
அவர் முதன்முதலில் இந்த பகுதியில் பேருந்து செலுத்த தொடங்கியபோது, தார் வீதிகளோ அல்லது கட்டடங்களோ கிடையாது என்றும், வீதிகளில் யானைகள் நடமாட்டமே அதிகம் இருக்கும் என்றும் தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்
போர் நடந்த காலங்களில் சோதனைச் சாவடிகளில் இறங்கி பயணிகளுக்காகப் பேசுவது முதல், பயணிகளின் மூட்டை முடிச்சுகளை ஏற்றுவதற்கு நடத்துனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் மக்களுக்காக உதவி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இலங்கை விமானப்படை சிப்பாயான லலித், ஒரு சிறந்த சாரதியாக பலரது பாராட்டுகளைப் பெற்றவர்.
இவருடைய ஓய்வு விழாவில் பௌத்த பிக்குகள், காவல்துறையினர், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அவருக்குப் பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர்
தன்னுடைய தந்தை மற்றும் கணவரின் இந்தச் சிறப்பான சேவையை மக்கள் இவ்வளவு தூரம் கொண்டாடுவதைக் கண்டு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஓர் அரசப் பேருந்து சாரதி , தனது நேர்மையான சேவையால் ஒரு ஊர் மக்களின் அன்பைப் பெற்று, அந்த ஊரையே கண்ணீரில் ஆழ்த்திய இந்த நிகழ்வு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

