பல மில்லியன் டொலர் மதிப்புள்ள ‘வாழைப்பழ’ கலைப்படைப்பு திருட்டு! பாரிஸ் அருங்காட்சியகத்தில் பரபரப்பு – Sri Lanka Tamil News

கலைப்படைப்பின் சிறப்பம்சம் என்னவெனில், அதில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் நிரந்தரமானது அல்ல. அது பழுதடையும் போது புதிய வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும்.

பல மில்லியன் டொலர் மதிப்புள்ள உலகப் புகழ்பெற்ற வாழைப்பழக் கலைப்படைப்பு பிரான்ஸில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள Pompidou-Metz அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த கலைப்படைப்பு காணாமல் போனதை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (31) கண்டறிந்தனர். இதையடுத்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்தாலிய கலைஞரான மாரிஸியோ கேட்டலன் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த கலைப்படைப்பு, ஒரு சாதாரண வாழைப்பழத்தை சுவரில் செலோடேப்பால் ஒட்டி உருவாக்கப்பட்டதாகும். “Comedian” எனப் பெயரிடப்பட்ட இந்தப் படைப்பு, கலைக்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் மதிப்பு குறித்து உலகளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

கலைப்படைப்பின் சிறப்பம்சம் என்னவெனில், அதில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் நிரந்தரமானது அல்ல. அது பழுதடையும் போது புதிய வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும். எனவே கலைப்படைப்பின் மதிப்பு வாழைப்பழத்தில் அல்ல; அதற்கான கருத்தாக்கத்திலும் உரிமைச் சான்றிதழிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

2024ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் இந்தக் கலைப்படைப்பை 6.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியிருந்தார். பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவமும் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், கலைப்படைப்பின் உரிமை தொடர்ந்ததால் அதன் மதிப்பு குறையவில்லை.

தற்போது திருடப்பட்டிருப்பது கலைப்படைப்பில் இடம்பெற்றிருந்த வாழைப்பழம் மட்டுமே எனவும், அதற்குப் பதிலாக மாற்று வாழைப்பழம் ஒன்றை அருங்காட்சியகம் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply