📍 வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றக் கோரிக்கை: 36 ஆண்டுகள் கடந்தும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து உள்நாட்டு யுத்தத்தின்போது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களின் இடம்பெயர்வுக்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை, ஜூன் 15) யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அண்மையிலும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, அப்போதைய யுத்தச் சூழ்நிலை மற்றும் அதிஉயர் பாதுகாப்பு வலய அறிவிப்புகளின் பின்னணியில், வலி.வடக்கு மக்களின் பெரும்பாலானோர் தமது வீடுகள் மற்றும் பாரம்பரிய காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அப்பகுதி மக்களில் பலருக்கு இன்னமும் முழுமையான மீள்குடியேற்றம் உறுதி செய்யப்படாததாக பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனையடுத்து, தமது காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி, சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காணி உரிமையாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இணைந்திருந்தனர். பலாலி சந்தி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக தனித்தனியாக இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையில், மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாக கையளித்தனர். 36 ஆண்டுகளாக தமது மக்கள் அகதி வாழ்வை எதிர்கொண்டு வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இரண்டு முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு (இல.1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் துரித நடவடிக்கைக்காக ஜனாதிபதியின் கவனத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

#Jaffna #ValikamamNorth #LandRights #Resettlement #HumanRights #SriLanka #Mayiliddy #JusticeForDisplaced #NorthernProvince #CivilRights

The post 📍 வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றக் கோரிக்கை: 36 ஆண்டுகள் கடந்தும் தொடரும் போராட்டம்! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply