2013 ஆம் ஆண்டின் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை மீளப் பெற பாதுகாப்பு அமைச்சு இணக்கம்: காணி விடுவிப்பில் முக்கிய முன்னேற்றம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பெருமளவான நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள மக்கள் காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு இரு நாள் உத்தியோகபூர்வ களப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர். மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்த இக்குழுவினர், அதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விசேட மாநாடு ஒன்றைக் கூட்டினர்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு, தத்தமது மாவட்டங்களில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய பொதுமக்களின் காணிகள் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தனர். குறிப்பாக, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய வீதிகள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை விடுவிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் நிலவிதிப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அதனை ரத்து செய்வதற்கான ஆரம்பகட்ட வேலைகளைப் பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் காவற்துறை, முப்படைகளின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தமானி மீளப் பெறப்படும் பட்சத்தில், வலி. வடக்கில் பல தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் காணி மீளுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கான வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply